Sunday, July 5, 2009

சாங் ஆப் ஸ்பாரோஸ்


ஒரு சாமானியனைப் பற்றிய ஒரு ஈரானிய படம்.

நீங்கள் நெருப்புக்கோழியை நேரில் பார்த்திருக்கிறீர்களா? நான் நம்மூர் கோழிகளை நெருப்பில் வாட்டுவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அதுவல்ல இது. ஆங்கிலத்தில் ostrich என்றழைக்கப்படும் நெருப்புக்​கோழிகள் அளவில் பெரியவை. பறக்கத் தெரியாது. தினமும் மூன்று முட்டைகளாவது​வைக்கும். அம்முட்டைகளை உடைப்பது எப்படியென்று இப்படத்தில் கரீம் என்பவர் சொல்லித்தருவார். சொல்ல மறந்த நெ.கோ. விஷயம் - அவை​வேகமாக ஓடும் - எவ்வளவு​வேகம்? நம்மை விட, கரீமை விட, அவரின் குடும்பச்சுமை, பொறுப்பு என எதைப் பற்றியும் கவலையே படாமல் வேகமா ஓடும்.

ஒரு ஈரானிய கிராமத்து வாசி கரீம். நீங்கள் அரைடவுசர்​பையன்தான் என்றாலும் வெகு எளிமையாய் உங்களை வசீகரித்து அருகில் வர வைத்துக் கொள்ளும் ஒரு அடர்மீசை​வெகுளி முகம் கரீமுடையது. ஏமாற்றங்களை சமாளிக்க​தெரியாத, நகரத்து பரபரப்புகளை வலிதில் ஏற்று திகையும் ஒரு முகம்.​நேர்மையும் குடும்பச்சுமையும் சுருங்கிய கண்கள். அப்புறம் ஒரு பறவை மூக்கு. கரீமோடுதான் மொத்த கதையும் பயணிக்கிறது. ஆகவே நம்மூர் ஸ்டைலில் அவர்தான் ஹீரோ எனக் கொள்வோமே? ஆனால் நமக்கு அவ்வளவு பழகாத 40+ வயது ஹீரோ, கிராமத்து ஆசாமி, டூயட்களும் கிடையாது - வேண்டுமானால் அவரே பாடிக்​கொள்வார். ஹீரோவுக்கு
படம் முழுக்க 2 சட்டைகள்தாம். அப்புறம் நம்மூர் ஹீரோக்கள் அவ்வளவாக ஜீரணிக்க முடியாத இஸ்லாமிய வாழ்க்கைமுறை வேறு.

எப்படியாயினும் படத்தின் ஆரம்பத்திலேயே நம் கைகளை வாஞ்சனையுடன் பற்றிக் கொண்டுவிடுகிற வசீகர அப்பாவி கரீம். எல்லாவித வேறுபாடுகளையும் தூக்கிக் கடாசிவிடுகிறார் தன் வெகுளிச் சிரிப்பில்.

ஈரான் மண், நெருப்புக்கோழிப் பண்ணை, டெஹ்ரான் நகரம், கரீமின் மகன் ஹுசேனின் மீன்கள் என எதுவும் நம்மை வித்யாசமாக உணரவிடுவதில்லை. ஹுசேன் ஒரு துறுதுறு.. இல்லை குறும்புக்காரச் சிறுவன். ஆனால் பெரிய கனவுகள் அவன் கருவிழியில் எப்போதும் துழாவிய படியே இருக்கிறான். பக்கத்துத்​தோட்டத்து கிணற்றில் அவன் தங்கமீன்களைப் பிடித்து விட்டு வளர்க்கிறான். பெருக்குகிறான். ஒன்று இரண்டாக, இரண்டு நான்காக, இன்னும் பெரிய அளவிலாக அந்த கிணற்றுள். ஹுசேனோடு அவனது நண்பர்களும் இந்த மீன் வளர்ப்பில் ஆர்வமாயிருக்கிறார்கள். மீன்கள் வெறும் உயிர்கள் அல்ல; எண்கள் - பணத்தைப் பெருக்கும் எண்கள். ஹுசேன் கரீமிடம் அடிக்கடி சொல்லி வருகிறான்.

"இந்த மீன்களைக் கொண்டு நான் பணக்காரனாகி விடுவேன். லட்சாதிபதி ஆகிவிடுவேன்"

10 வயது சிறுவன் பணக்காரன் கனவில் இருப்பது அந்த (குடும்ப) சூழ்நிலையின் மெளனமாய் கவிந்திருக்கிற வறுமையைச் சுட்டி காட்டுகிறது. கரீமின் மூத்த மகள் ஹனியா. காதில் கேளுதவி கருவியோடு இயங்குபவள். ஒருமுறை ஹுசைனின் லூட்டியால் அது பழுதாகிவிடுகிறது. அதன் விலையோ கரீமுக்குப் பெரியது. கோபத்துடன் ஹுசைனை வினவுகிறார்,
"இதோட விலை என்ன தெரியுமா?"

"ஒரு லட்சம் மீன்கள்"
மிரண்ட கண்களுடன் உரைக்கிறான் ஹுசைன்.
கரீமின் மனைவி நர்கீஸ், கடைசி மகள், அவரின் வீடு, முற்றத்தில் போட்டு​வைத்திருக்கும் தட்டுமுட்டு சாமான்கள், தங்கமீன்கள் பெருகும் கிணறு, நீர் ​மொண்டு வருகிற வீட்டுக்கிணறு, கரீமின் சிவப்பு வண்ண பைக், நெருப்புக் கோழி பிடிப்பது, நீல வண்ணம் அடிக்கப்பட்ட கதவு, சாம்பல் களறியாக காணும் வயல்​வெளிகள் என படம் முழுதும் புகைப்பட நேர்த்தி கொண்ட காட்சிகள்.
தனி மனிதனின் இயல்பு, அது வெளிப்படும் சந்தர்ப்பத்தை பொறுத்து அசாத்தியத் தன்மை வாய்ந்தவையாகி விடுகின்றன. தேர்ந்த இயக்குநரின்
நுண்ணறிவு இதை கவனித்து உணர்ந்து அதை காட்சிப்படுத்தும் போது இந்த அசாத்தியம் ஒரு இலக்கியப் பதிவாகிறது.

இதற்கு உதாரணம் கரீம் நகரத்துக்குச் சென்று டூவிலர் டாக்ஸியாக செயல்பட்டு பணம் ஈட்டி, புதியதாக ஒரு ஆன்டனா வாங்கி வந்து வீட்டுக் கூரையில் மாட்டுகிறார். மாட்டிவிட்டு அப்படியே கூரையில் இருந்தபடியே பக்கத்து வீட்டுக் கூரைகளை​நோட்டமிடுகிறார். ஊஹும்.. ஒன்று கூட கரீமின் புது ஆன்டனா சைஸ், கம்பிகள் எண்ணிக்கை பக்கம் கூட வர ஆகாது. அப்படியே ஒரு பெருமிதம் மின்னுகிறது கரீமின் கண்களில். உதட்டில் ஒரு அசட்டு சிரிப்பு வேறு.

இது ஒரு எளிய காட்சிதான். ஆனால் இந்த எளிமைக்கு உன்னதம் சேர்ப்பது இயக்குநரின் கைவண்ணம். எப்படியென்றால்., இந்த சம்பவத்துக்கு முன் ஒரு காட்சி, அதில் கரீம் கூரையில் இருந்து பழைய சிறிய ஆன்டனாவை சரி செய்து கொண்டிருப்பார். கீழே ஹுசேன் டிவியை பார்த்தபடி இடது வலது எனக் கத்திக்​கொண்டிருப்பான். இது போன்ற சிறுசிறு அலைகள் ஒதுக்கிய நுரைதான் சிலசமயம் ​பெருங்கடலை விட அழகாக தெரிகின்றன!​

நெருப்புக்கோழி பண்ணையிலிருந்து ஓடிவிடுவது, அதை துரத்திச் செல்வது, கரீம் அதைப்பிடிக்க நெ.கோ. போல​வேடமணிந்து செல்வது, புதரில் படபடக்கும் இறகுகள், கடையில் காணும் நெ.கோ. முட்டை, ​​கோழியில்லாமல் பண்ணை வேலையிழந்து வீடு திரும்பும் போது நிறைய பண்டங்களும் ஒரு முட்டையும் கொண்டுவருதல் என படம் முழுக்க நெ.​கோ. இழப்பு வறுமையின் குறியீடாக உணர்த்தப்பட்டிருக்கிறது.

ஹனியாவின் காது இயந்திரம் பழுதடைவிலிருந்து ஒரு துர்கனவு ஆரம்பமாகிவிடுவது போலிருக்கிறது. அதை சரி​செய்யும் பொருட்டு தன் பைக்கில் நகரமான டெஹ்ரான் செல்கிறார். டாக்டர் அதன் விலை மிக அதிகம் என்கிறார். வரவழைக்க மூன்று மாதம் வேறு ஆகும்.
ஹனியாவோ தன் தேர்வுகளை எதிர்நோக்கியிருக்கிறாள்.

இந்த சமயத்தில்தான் கரீமுக்கு நெ.கோ. பண்ணை வேலை போய்விடுகிறது.​டெஹ்ரானிலேயே தன் பைக்கை வாடகைக்கு ஆள்களை (சிலசமயம் சரக்கு) ஏற்றிச் சென்று சம்பாதிக்கிறார். இது ஒரு கணிசமான தொகையாவும் படுகிறது கரீமுக்கு. மனைவியிடம் கனவுகளை விவரிக்கிறார். புதிதாக வீட்டுக்குப் பொருட்களை வாங்கி வருகிறார்.
கிராமத்திலிருந்து நகரத்து சென்று சம்பாதித்து வருபவர்கள் பாக்கெட்டில் பணம் மட்டும் இருக்காது. நிறைய நம்பிக்கை.. புதிதாக கற்றுக்​கொண்ட நகர சாமார்த்தியங்களின் பெருமை எல்லாமும் ஒரு கலவையாக இருக்கும். இது ஒரு நுட்பமான விஷயம். இதை சரியான விகிதத்தில் நடிப்பில் கொண்டு வந்திருப்பார் கரீம்.

இதைவிட நான் ஆச்சரியப்பட்டு ரசித்த விஷயம்: கிராமத்து மனிதர்களையும் நகரத்து மனிதர்களையும் வெகு இயல்பாக வேறுபடுத்திக் காட்டியிருப்பது. கிராமத்து மனிதர்கள் பேசுவது பழகுவதில் நிதானத்தையும், டெஹ்ரான் நகரத்து மனிதர்கள் வேகமாக செயல்படுவதிலும், அவர்களின் சுயநலத்தன்மையையும் உன்னிப்பாக படமாக்கியிருக்கிறார் இயக்குநர் மஜீத்.

இரு அலங்கார விளக்குகளுடன் வாட​கைக்கு வருகிறார் ஒரு நகர ஆசாமி. சேர வேண்டிய இடத்தில் விட்டதும், அந்த ஆசாமி விளக்குகளை கரீமிடம் ​கொடுத்து மூன்றாவது மாடியில் வைக்கச் சொல்கிறார்.

"பரவால்லே, பரவால்லே​போப்பா, ​பைசா சேத்துக் கொடுக்கிறேன்.. சீக்கிரமா போ"

"இல்ல நான் போவணும்"

"போலாம் போலாம்.. சீக்கிரம் கொண்டு போ இதை"

"..."

"ஆச்சா.? சரி இந்த பாக்ஸையும்.. அட போப்பா.. உன் வண்டிய யாரும் தூக்கிட்டு போக மாட்டாங்க. நான் பாத்துப்பேன்"
"..."

"அடடா சட்டை கிழிஞ்சுடுச்சா.. கவலப்படாதே நான் உனக்கு வேறு நல்ல சட்டை தரேன்"
கிழிந்த சட்டைக்கு பதிலாக வேறு சட்டையும் சுமைக்கூலி சம்பளமும் கிடைக்கிறது.
கரீம் மிகவும் நல்லவர், நேர்மையானவர் என்று வரிந்து கட்டி சொல்லும்படிக்கு சில காட்சிகளை அமைத்திருப்பார் இயக்குநர். அவைகளில் சிலது சாதாரண கலை வெளிப்பாடு கொண்டவை. டிராபிக்கில் பிச்சை கேட்ட சிறுமிக்கு சில்லறை முறிக்க முடியாமல் டிராபிக்கில் அடித்துச் செல்லப்படுவது.. அதே நேரத்தில் வீடு திரும்பும் வழியில் சாலையோரத்தில் குளிர்பானம் விற்றுக் கொண்டிருக்கும் மகளையும் மகனையும் அடிப்பது என சாமானிய மனிதனின் நுண்ணுணர்வுகள் நிறைய உண்டு.

மனைவி அவசரப்பட்டு விற்ற நீல வண்ணம் பூசிய கதவை அவரின் உறவினர் வீட்டிலிருந்து தனியாளாக முதுகில் சுமந்து, சாம்பல் வயல் வெளியே வருவது நம்முள் பாரத்தை ஏற்றும் காட்சி. வீட்டு தட்டுமுட்டு சாமான்களில் சிக்கி பரிதாபமாய் காலை உடைத்துக்கொண்டு படுத்துக்கிடக்கும் காட்சி இத்தனை உழைப்பும் வீணோ என்று கேட்கிறது. எப்போது கரீம் மீண்டும் எழுந்து நடப்பார் என பதைக்க வைத்துவிடுகிறது.

கரீம் காலில் கட்டுடன் டாக்டரை பார்க்க ஹுசேனுடன் நகரம் செல்கிறார். ஹுசேன் குடிக்க ஏதாவது வாங்கிவரலாம் என்று பக்கத்துக் கடைக்குச் ​செல்கிறான். கரீம் தனியாக உட்கார்ந்திருக்கிறார். கையிலிருக்கும் காசுக்கு ஒரே ஒரு ஜுஸ் பாக்கெட் மட்டும் வாங்க முடிகிறது ஹுசேனால்.கரீமிடம் அதைக் கொடுத்து குடியுங்கள் என்கிறான். உனக்கு எங்கே என்கிறார் கரீம். நான் குடித்துவிட்டேன் நீ குடி என்கிறான் ஹுசேன். சரியென்று இரண்டு மிடறு குடித்துவிட்டு,

"பரவால்லடா.. இந்தா நீ ரெண்டு வாய் குடி"

என்று மகன் கையில் திணிக்கிறார் கால் உடைந்த கரீம்.திகைத்து பின் அதை வாங்கிக் குடிக்கிறான் ஹுசேன்.

காலொடிந்ததால் வீட்டிலிருக்கும் அனைவரும் வேலைக்கு போக வேண்டிய கட்டாயம். ஹுசேன்​டிரக்கில் ரோஸ் செடிகளை இறக்கி ஏற்றும் வேலை. ​கைகளில் காய்த்துக்கிடப்பதைப் பார்த்து கண்ணீர் விடுகிறார் கரீம். மகள் ஹனியா தன் காது இயந்திரம் இப்போ சரியாக​வேலை செய்கிறது என்கிறாள் கரீமிடம்.

"எப்படி அதுதான் கெட்டு போச்சே?"

"இல்ல பேட்டரி மட்டும் மாத்துனேன். இப்ப நல்லாக் கேக்குது"

தான் பேசுவது மகளுக்கு கருவி மூலம் கேட்பது பற்றி சந்தோஷமாகிறார். இதைச்​சொல்லிவிட்டு மகள் திரும்புகிறாள். அப்போது பக்கத்திலிருந்த மாத்திரை கீழே விழுந்து விடுகிறது. அதை எடுக்க மகளை அழைக்கிறாள்.

"ஹனியா ஹனியா"

மகள் திரும்பவில்லை. ​தோளைத் தட்டிக்கூப்பிட்டதும் திரும்புகிறாள். உதட்டசைவில் மட்டும் ஒலியை உணர முடிகிறது ஹனியாவால்.காது இயந்திரம் வேலை செய்கிறது என்பது பொய். தன் பொருட்டு மகள் பொய் சொல்கிறாள் என்று மேலும் வேதனையடைகிறார் கரீம்.
பின்னொரு சமயம், டிரக்கில் நகரத்திலிருந்து திரும்புகிறார்கள். கரீம், ஹுசேன், அவனது நண்பர்கள், அவர்களது முதலாளி. வண்டி நிறைய பூந்தொட்டிகள். அதற்கு அடியில் ஹுசேனின் தங்கமீன்கள்.. நூற்றுக்கணக்கில். நண்பர்கள் அனைவரும் பூந்தொட்டிகளை இறக்கி​வைக்க செல்கிறார்கள்.

ஹுசேன் திரும்பி வந்து பார்க்கும்​போது மீன்​தொட்டி - அது ஒரு பிளாஸ்டிக் - ஓட்டை விழுந்து நீரெல்லாம் வெளியேறிக் கொண்டிருக்கிறது. ​பையன்கள் அனைவரும் போர்க்கால நடவடிக்கை​போல் அவசர அவசரமாக மேலுள்ள அத்தனை பூந்தொட்டிகளையும் தூக்கி கடாசிவிட்டு மீன் தொட்டி​யை​வெளியே எடுக்கிறார்கள். கரீம் பையன்கள் பூந்தொட்டிகளை உடைப்பதைப் பார்த்து அதிர்ந்து டிரக்கை விட்டு வெளியே வருகிறார். ​பையன்களைப் பார்த்து கத்துகிறார். ஏன் இந்த கிறுக்குத்தனம் என்று. ​பையன்கள் எதையும் கவனித்த மாதிரி தெரியவில்லை. அவர்களின் ஒரே குறிக்கோள் மீன்களை எப்படியாவது காப்பாற்றுவது. மீன்கள் வெறும் மீன்களல்ல. தங்க மீன்கள். அத்தனையும் அவர்களின் பணக்கனவுகள். பரிதாபம் பையன்களால் மீன்களைக் காப்பாற்ற முடியவில்லை. தண்ணீர் இருக்கும் இடத்தை நோக்கி வேகமாக தொட்டியைத் தூக்கிச் செல்லும் போது கைதவறி தொட்டி கீழே விழுந்து மீன்கள் சிதறுகின்றன. எவ்வளவு போராடியும் மீன்களுக்கு நீர் கொண்டு வரமுடியவில்லை. மீன்கள் தரையில் கிடந்து துள்ளுகின்றன. கடைசியில் பையன்கள், கண்மீன்கள் நீரில் அமிழ தரையில் துள்ளும் தங்கமீன்களை பக்கத்து சாக்கடையில் விடுகிறார்கள். ஒரேயொரு மீனை மட்டும் பாலிதீன் பாக்கெட் நீரில் போட்டு எடுத்துக் கொள்கிறான் ஹுசேன். அவன் திரும்ப அதைப் பெருக்க வேண்டும். அதே பக்கத்து வீட்டுக் கிணற்றில். ஒன்றிலிருந்து இரண்டாக.. இரண்டிலிருந்து நான்காக.. பின்
நூறாகவும்..
சிறுவயதில் அளவுக்கு மீறிய உழைப்பு அது திரும்பவும் பூஜ்யத்திலிருந்து தொடங்கப்பட வேண்டும் என்பது எத்தனைக் கொடுமை? இந்த இழப்பினூடே சோகம் ததும்பிய முகங்களாக டிரக்கில் பயணிக்கிறார்கள் சிறுவர்கள். அப்போது அவர்களோடு சேர்ந்து கொள்ளும் கரீம் அவர்களின் சோக முகங்களைப் பார்க்கிறார். பக்கத்திலிருக்கும் ஒரு சிறுவனுக்கு கை விரலில் காயம் பட்ட ரத்தம் கசிகிறது. தன் கைக்குட்டையை கிழித்து அதற்கு கட்டுப் போடுகிறார். ​பையனைப் பார்த்து ஒரு எளிய சிரிப்பு சிரிக்கிறார். பிறகு நம்பிக்கை ததும்பும் ஒரு பாடலைப் பாடுகிறார். பையன்கள் கொஞ்சம் கொஞ்சமாய் புன்னகைப் பூக்கிறார்கள். தன் நம்பிக்கை, இழப்பிலிருந்து மீளெழுதல், உழைப்பின் வெற்றி இவையனைத்தையும் ஒரு பயணத்தினூடே அடுத்த தலைறைக்குக் கொண்டு சேர்த்துவிட்டாற் போன்ற உணர்வுடன் தொடர்கிறது டிரக் பயணம்.
என்னைப் பொறுத்தவரை படம் இந்த புள்ளியிலேயே முற்றுப்பெற்று விட்டது. ஆனால் படம் இன்னும் இருக்கிறது.

படத்தின் இசையைப் பற்றி இங்கே சொல்ல வேண்டும். கரீம் பாடும் சில பாடல்கள், பின்புலமாய் மசூதி தொழுகை ஒலி, ரய் பாடல்கள், டெஹ்ரானின் நகரத்து நெரிசல் இப்படியாக படம் முழுவதும் பயணிக்கிறது இசை. கரீம் கதவை முதுகில் சுமந்து வரும் காட்சி, நெ.கோ. தேடிச் செல்லும் காட்சி போன்றவற்றில் ப்ரத்யேக ஈரானிய இசை வடிவங்களாய் நிறைகின்றன.

திரைக்கதை நெருக்கமான கோர்வையாய் சீரான வேகத்தில் ​செல்லும்படி அமைக்கப்பட்டிருக்கிறது. சுமையான காட்சிகளுக்கிடையேயும் சுவாரஸியமான காட்சிகள் வந்து போவதால் அலுப்பு தட்டாமல் படம் பார்க்கமுடிகிறது. ஒவ்வொருவருக்கும் முக்கியத்துவம் கொடுத்து காட்சிகளும் உரையாடல்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. கரீம் அளவுக்கு இணையாக நடித்தவர் என்றால் அது அவரது பையன் ஹுசேன்தான்.

வறண்ட நிலங்கள், கிராமிய வீடுகள், கரீம் பைக்கில் பயணிக்கும் தூரங்கள், டெஹ்ரானின் ​நெரிசல் என காமிரா வெளிச்சச் செறிவோடு படமாக்கியிருக்கிறது. மீன்களை பையன்கள் சிதறவிடும் காட்சி ஒரு ஒளிக்கவிதை.

உரையாடல்களின் சிக்கனத்தன்மை ஒளிபதிவின் வேலை சிலசமயம் இரண்டாக்கிவிடும். முன்னேற்பாடான திட்டம் இருந்தால் மட்டுமே இம்மாதிரியான கூட்டணி சாத்தியமாகும். மொழிபெயர்ப்பில் படித்த சப்டைட்டில் வசனங்கள்தான் என்றாலும் வார்த்தைச் சிக்கனமும், தெளிவும், நகைச்சுவையும் உரையாடலின் நேர்த்தியைப் பறைசாற்றுகின்றன.

திரும்ப கதைக்கே வருவோம்

ஓடிப்போன நெருப்புக்கோழி திரும்ப பண்ணைக்கே வந்துவிடுகிறது. கரீமுக்கு வேலையும் கிடைத்து விட்டது என்கிறார் நண்பர். எல்லாத் துயரும் ஒரு கணம் வடிந்தாற் போன்ற எண்ணம் கரீமுக்கு. அப்போது தன் மாவுக்கட்டுப் போட்ட காலில் தன் குழந்தைகள் வரைந்த ஓவியத்தைப் பார்க்கிறார். தேடித்தேடி கண்டுபிடிக்க முடியாத ரகசியத்தின் சங்கேதக் குறிப்பாக அதை உணர்கிறார். கால் மாவுக்கட்டில் வரையப்பட்டிருக்கும் மரத்தைக் கொண்ட நிலவெளியை தன் வண்டியின் மூலம் சிரமப்பட்டு அடைகிறார். அங்கே நூற்றுக்கணக்கில் குஞ்சுகளாய் நெருப்புக்கோழிகள். அலையென
விரிகிறது கரீமின் புன்னகை அந்த மலைவெளியில்.

அடைகாப்பதின் ரகசியத்தையும் பொறுமையின் அவசியத்தையும் உணர்த்தும் ஒரு காட்சியாக நிறைகிறது படம்.

2 comments:

butterfly Surya said...

அருமை..

வாழ்த்துகள்.

ஷங்கி said...

அருமை. ரொம்ப ஒன்றிட்டீங்க போலிருக்கு. என்னடா தம்பியை ஆளே காணோம், நல்லாருக்காரா இல்லையா அப்படீனு நினைக்கும்போது இந்த இடுகை. காரணம் புரிஞ்சிருச்சி. ரொம்பப் பாதிச்சிருச்சு போல!
அருமை!
அன்புடன் சங்கா!