Wednesday, July 28, 2010

கிளஸ்டர்-நோவா (மாறுதிசை)

2011 ஜுலை - கென்னடி விண்வெளி மையம், ப்ளோரிடா:

பின்னணியில் எழுத்துக்கள் ஓடிக்கொண்டிருக்க, கைகளை விஸ்தாரமாக விரித்தபடி விஞ்ஞானி ராமகிருஷ்ணன் கிளஸ்டர்-நோவா பற்றி பேசிக்கொண்டிருக்கிறார். இஸ்ரோவிலிருந்து நாஸாவிற்கு சிறப்பு பரிந்துரையின் பேரில் வந்தவர். அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு ராமகிருஷ்ணனின் கிளஸ்டர்-நோவா திட்டம் ரொம்பவும் பிடித்துப் போய்விட்டது.

ஹே, ராம்.. யு நோ.. என்று ஆரம்பித்து 5 நிமிட அடர்த்தியில் கேள்விகளும் கேட்க ஆரம்பித்தார்கள். அதற்கு ராமகிருஷ்ணனின் பதில்கள் அடர்த்தியாகவும் திடமாகவும் இருந்தன. ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும், அமெரிக்க ராணுவத் தளபதி ஒருவர் ராமகிருஷ்ணனை தனியாக அழைத்துக் கொண்டுபோனார் - அவசரமாக.

2013 ஜுன் - மார்க்கம்பட்டி, அரசினர் நடுநிலைப்பள்ளி:

புதுவகுப்பில் இருக்கை பிடிக்கும் அவசரத்தில் மாணவர்கள் வகுப்பறைக்கு ஓடிக்கொண்டிருந்தார்கள். அது ஆறாம் வகுப்பு. முன்வரிசையில் எப்போதும் போல் பெண்கள் எடுத்துக்கொண்டார்கள். அமர்ந்த கொஞ்ச நேரத்தில் நிர்மலா ஆசிரியை வந்தார். வணக்க்க்கம்ம்ம் டீச்சர்ர்ர் முடிந்ததும், ஆசிரியை பாடம் நடத்த ஆரம்பித்தார். அறிவியல்.

'எல்லாரும் போன வருஷமே பூகோள திசைமாற்ற இயக்கம் படிக்க ஆரம்பிச்சிருப்பீங்களே..?'

'ஆம்ம்மாம்ம் டீச்சர்ர்ர்'

'யாருக்கெல்லாம் அது புரியலே..?'

'...........'

'சரி.. இந்த வருஷ சிலபஸ்ல நிறைய மாத்தியிருக்காங்க. அறிவியல் முழுதும் பூகோள திசைமாற்றம் பற்றிதான் வரும்'

மாணவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

'சரி இப்ப கொஞ்சம் படித்ததிலிருந்து கேள்வி கேட்கலாமா?'
'...'
'எங்கே.. சிவக்குமார், நீ சொல்லு.. பூமியின் சுற்றுவேகம் குறையத் துவங்கும் நாள் எது?'

'14ந் தேதி ஜுலை 2018'

'வெரிகுட்.. அடுத்து.. கவிதா பூமிச்சுற்றுவேகம் பூஜ்யம் ஆக எத்தனை நாட்களாகும்?'

'108 நாட்கள்'

'சபாஷ்.. எல்லாரும் படிச்சதை மறக்காம வச்சிருக்கீங்க. அடுத்த கேள்வி விண்கப்பல் அடர்தொகுதி என்பது என்ன? இக்பால் நீ விளக்கமா சொல்லு பாப்போம்..?'

'பூமி சுற்றுவேகம் குறையத்துவங்குவதற்கு 7 நாட்கள் முன்பே, மனிதர்களை ஏற்றிச்செல்லும் விமானம்......'

'மனிதர்களை ஏத்திக்கிட்டு மாட்டுச் சந்தைக்கா போறாங்க? சரியா சொல்லுடா'

வகுப்பின் கொல்சிரிப்பும், மற்றவர்கள் எடுத்துக் கொடுக்கும் முதல்வரியுமாக இக்பால் பதில் சொல்கிறான்..

'மனிதர்களை ஏற்றிக் கொண்டு இந்த விமானம்.. இல்லே இல்லே... இந்த விண்கப்பல்கள் பூமியின்...'

என இக்பால் தொடர, புதுவகுப்பு இனி​தே ஆரம்பித்தது!

2018 ஜுலை 14 - திபெத், கோகனார் ஏரிக்கரை அருகாமை புத்த மடாலயம்:

இரவு குளிராக அரும்ப துவங்கிய பொழுது. மரங்களால் அமைந்த அந்த உயர்ந்த மடாலயத்திலிருந்து யாங் உச்சாடனம் மெலிதாக காற்றில் கலந்து கொண்டிருந்தது.

நியங்மா, போதிசத்வர் மரபு சார்ந்த மடாலயம் அது. மடத்திலிருந்து வெளிவந்தார் முதிய புத்த பிஷு சியூடென். தர்மசக்கரங்களை சுற்றியவாறே வானை அண்ணாந்து பார்த்தார். வானம் ரகளையான ஆரஞ்சு நிறக் கீறல்களாய் இருந்தது. முழுநிலா எழும்ப ஆரம்பித்துவிட்டது. தூய மஞ்சளொளி இனி பனிநிலத்தில் ஒளிர ஆரம்பித்துவிடும். அப்போது ஏரிக்கரையை பார்ப்பது அருமையானது. மடத்திற்கு புதிதாக இன்று யாருமே வரவில்லை. கோகனார் மொத்தமுமே அமைதியில் விழுந்து விட்டது போலிருந்தது. சில நாட்கள் முன்பு அந்த இடமே வெகு பதற்றமாக இருந்தது. அப்போது மனிதர்கள் பதைபதைப்போடு மழைக்கால எறும்புகள் போல திரிந்து கொண்டிருந்தார்கள்.

எனக்குத் தேவையானது எல்லாம் ஏற்கனவே போதிக்கப்பட்டு விட்டது. ஆகவே எனக்கு பதற்றமில்லை - என்று சொல்லிக் கொண்டார் பிஷு. ஏரியை நோக்கி மெதுவாக நடக்கத் துவங்கினார் சியூடென்.

2018 ஜுலை 14 - கிளெஸ்டர்-நோவா, Node:58 @ 12th Array:

கண்ணாடி தடுப்புகளால் ஆன பாதை வழியாக மக்கள் நகர்ந்து கொண்டிருந்தார்கள். பாதுகாப்பு ஆட்கள் ஒவ்வொருவரையும் கவனமாக பரிசோதித்து அனுப்பினார்கள். அந்த வெளி முழுவதும் குளிரூட்டப்பட்ட பரிசுத்தமாக விளங்கியது. மெலிதாக ஒரு ரிதம் கூட காற்றில் தவழ்ந்தது. மனிதர்களை நான்கு விதமான சீருடைகளால் பகுத்திருந்தனர். வெள்ளை, சாம்பல், அடர்சாம்பல் மற்றும் கருப்பு. சாதாரணர்கள் - வெள்ளை; காவலர்கள் - கருப்பு சீருடை.

கண்ணாடித் தடுப்பு சுவர் முழுக்க நோடு 58 அமைப்பு, கிளெஸ்டர் நோவா-வின் தன்மை மற்றும் விதிகள் பற்றிய படங்களாக இருந்தன.
வரிசையில் நின்றிருந்தவர்களில் ஒரு வயதான தம்பதியினரும் இருந்தனர்.

'ரோஹிணி.. ரொம்ப நேரம் நிக்கறோமே? கால் வலிக்கலியா உனக்கு?'

அந்த தளர்ந்த வயதான அம்மா கணவரிடம் திரும்பினார்.

'ப்ச்.. பரவால்லேங்க. டாப்லெட் போட்டுட்டுத்தான் வந்தேன்'

'கொஞ்ச நேரம்தான். அப்புறம் நமக்கு ஹவுஸ் அலாட் பண்ணிடுவாங்க'

'உங்களுக்குதான் ரொம்ப சிரமம் இதில.. இல்லியா?'

'சிரமம் என்னயிருக்கு..? தினேஷ் நமக்காக பணம் கட்டியிருக்கான். நாம ஹாயா இங்க வந்துட்டோம்'

'எனக்கு என்னவோ இதெல்லாம் பார்க்க ஒரே உதறலா இருக்குங்க'

'அட போடி.. இதுக்கு முன்னாடி இருந்த அப்பார்ட்மண்டை விட இன்ன்னும் உயரமான வீட்டில வாழப்போறோம்னு நினைச்சுக்கோ. இதெல்லாம் ஸயன்ஸ். எ குட் டெக்னிகல் அட்வான்ஸ்மண்ட். மனுஷனோட எக்ஸிஸ்டன்ஸ் எவ்ளோ முக்கியம்னு காட்டப் போறது. இந்த கிளஸ்டர் நோவாவில...'

'ஐயோ.. போதும் நிறுத்துங்க உங்க நோவா புராணத்தை. கேட்டுக் கேட்டுக் காது புளிச்சுப் போச்சு'

'உன்கிட்ட சொன்னேன் பாரு' என்றவர் திரும்பி பின்னால் நின்றவரிடம்,

'இன்னும் எவ்ளோ நேரம்தான் க்யூவிலேயே நிக்கறதாம்? க்யூ நகர்றதா என்ன?'

பின்னால் நின்றவர்,

'மைட் பி. பட், கவுண்டர்ல ஏதோ ப்ராப்ளம் போல. அதுதான் க்யூ ஸ்டரக் ஆயிடுச்சு'

வயதான கணவர் அலுத்துக் கொண்டார்.

'இட்ஸ் ரிடிக்குலஸ். எவ்ளோ அட்வான்ஸ்ட்டு டெக்னாலஜி இது. இங்க போயி க்யூ, வெயிட்டிங், பக்ஸ்-ன்னு இருக்கலாமா? ஒவ்வொருத்தனும் எவ்ளோ பாடுபட்டு இங்க இடம் பிடிக்க வேண்டியதா இருக்கு. ஏதோ சீனியர் ஸிட்டிஸன்கிறதால பர்ஸ்ட் ஸ்டேஜ்லயே ஷிப்ல அட்மிஷன் கொடுத்துட்டான்'

'ஆமாமா.. இன்னும் பூமியிலிருந்து 400 கோடி ஜனங்களை ஸ்டேஜ்-பை-ஸ்டேஜாத்தான் நோவாவுக்கு கொண்டு வருவாங்களாம்'

'அதுக்கு இன்னும் 3 மாசம் ஆயிடாது?'

'மைட் பி. என் தம்பி பேமிலிக்கு கூட அடுத்த மாசம்தான் அட்மிஷன் போட்டிருக்காங்க. என் மகள் இங்க வர இன்னும் 47 நாள் இருக்கு'

'கரெக்ட்.. இந்த அலாட்மண்ட்டே ஒரு பெரும் இம்சை. வயசை வச்சு ஸார்ட் பண்றாங்களா இல்லே இடத்தை வச்சான்னு தெரிய மாட்டேங்குது. இருந்தாலும் இட்ஸ் எ நைஸ் இன்னோவேஷன்! இந்த க்ளெஸ்டர்-நோவாங்கிறது...'

ரோஹிணி என்ற அந்த வயதான அம்மாள், கணவரைத் தொட்டு,

'சும்மா தொணதொணன்னு பினாத்தாம அமைதியா வாங்க. அப்புறம் பிரஷர் ஏறிக்கப் போறது'

'சும்மா இருடி. ஐ நோ ஆல்'

என்று மனைவியை அதட்டிவிட்டு பின்னால் நின்றவிடம் பேச்சைத் தொடர ஆரம்பித்தார்..

'ஸார்.. அலாட்மண்ட் கூட வாங்கிடலாம். ஆனா இந்த கம்யூனிகேஷன் இருக்கே அதுதான் பெருந்தொல்லை. பாருங்களேன், வந்து 2 நாளாயிடுச்சு.. இன்னும் பையன்னு ஒரு ஃபோன் போட முடியலே'

'அட சும்மாயிருங்க ஸார்.. போன் கம்யூனிக்கேஷனுக்கு சொல்றீங்களே.. நாங்க நேத்து பூரா ஒரு ஹிந்தி க்ரூப் கூட மாட்டிக்கிட்டேன். ஒரு வழியா கருப்புச் சட்டைக்காரங்களப் பிடிச்சு தமிழ் க்ரூப் மாத்திக்கிட்டு வந்தோம்'

'ஓ.. இந்த ப்ராப்ளம் வேற இருக்கா? நான் லாங்குவேஜ் பாத்துத்தான் மனுஷங்களை பிரிக்கறாங்கன்னு நெனச்சுக்...'

வயதான கணவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே முன்வரிசைக் கூட்டத்தில் சலசலப்புக் கேட்டது. என்ன என்று திரும்பும் முன் சடாரென ஒரு உருவம் இவர்கள் அருகில் வந்து விழுந்தது. வேகமாக ஓடிவந்த கறுப்புச் சீருடை பாதுகாவலர்கள் கீழே விழுந்தவரை எழுப்பி இழுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்கள்.

இழுத்துச் செல்லப்பட்டவர் அடர்சாம்பல் சீருடை கொண்டிருந்தார். பாதுகாவர்கள் பிடியிலிருந்து திமிறியவராக,

'ஸ்டாப்பிட்.. இடியட்ஸ்.. என்னால இங்க இருக்க முடியாது.. கொலைகாரங்களா.. இது என்ன ஜெயிலா? என்ன மாதிரியான அபத்தம் இது..'

பாதுகாவலர்கள் அவரை இறுக்கமாக பிடித்து இழுக்க முயன்றனர். இன்னொரு பாதுகாவலர் மயக்க மருந்து துப்பாக்கியை அவர் மீது பிரயோகிக்க முயன்றார். பிடியிலிருந்தவர் திமிறிக்கொண்டேயிருந்தார்..


'இடியட்ஸ்... முட்டாள்தனமான டிஸைன் இது. நான் சொன்னது இது இல்லே. இது எல்லாமே தப்பு...'

என்றவராய் கூட்டத்தைப் பார்த்து,

'எதுவும் உங்களுக்குப் புரியலியா? ஏன் இங்க வந்து மாட்டிக்கறீங்க? இது உங்களை காப்பாத்தப் போறதில்ல.. நீங்க பேசாம பூமியிலேயே.....'

அவர் சொல்லி முடிக்கும் முன் கைகளை முதுகு பக்கமாக முறுக்கி எலிபோல தரையில் படுக்க வைத்தனர். ப்ஸக்க்....மயக்க மருந்து பிரயோகிக்கப் பட்டு விட்டது. அவருக்கு கண்கள் சொருக ஆரம்பித்தன.குழறலான குரலில் இங்க வராதீங்க.. தப்பிச்சுப் போயிடுங்க.. ப்ளீஸ்.. என்றவாறே.... பின் சில நொடிகளில் மயங்கிவிட்டார்.

வரிசையில் நின்ற அனைவரும் திக்கித்துப் போயிருந்தனர். வயதான தம்பதியினர் எதுவும் பேசத் தோன்றாமல் உறைந்து போயிருந்தனர். மயங்கிக் கிடந்தவரை லாவகமாக பாதுகாவலர்கள் தூக்கிக் கொண்டுப் போனார்கள்.

வரிசையில் நின்றிருந்தவர்கள் கொஞ்ச நேரம் பரபரப்பாக பேசிக்கொண்டனர். அப்புறம் சிறிது நேரத்திலேயே சகஜமாகிவிட்டார்கள். பின் மொத்த வரிசையும் கெளண்டர் இருக்கும் பக்கமாக திரும்பிக் கொண்டது இயல்பாக. முதிர் தம்பதிகள் ஒருவரையொருவர் கலவரமாகப் பார்த்துக் கொண்டனர்.

மனைவி கணவரிடம் திரும்பி,

'உங்க கால்கிட்ட ஏதோ கிடக்குது பாருங்க..'

கணவர் குனிந்து காலருகே கிடந்த அதை எடுத்தார்.

'ஏதோ பேட்ஜ் போலிருக்குடி! அந்த தள்ளுமுள்ளுல கீழே விழுந்திருக்குமோ??'

பேட்ஜ்தான் அது. அடர்சாம்பல் நிறம் கொண்ட பேட்ஜ். இழுத்துச் ​செல்லப்பட்டவரின் சீருடை நிறம் ​கொண்ட ​பேட்ஜ்.

'என்ன பேரு போட்டிருக்குங்க?' என்றார் மனைவி.

'ராமகிருஷ்ணன்..' என்றார் கணவர்.

க்யூ மெதுவாக நகர ஆரம்பித்தது.

*
(மாறுதி​சை பற்றி ​தொடர்பதிவு எழுதப் பணித்த நண்பர் விஜய்-க்கு (அகசூல்) நன்றி)