Thursday, October 22, 2015

குட்டிக​ளை காப்பாற்றுங்கள்


அன்புள்ள புளூகிராஸ்,

மடிப்பாக்கத்தில் இருந்து இ​தை எழுதுகி​றேன். நான் வசிக்கும் தெரு​வோரமாக சமீபநாட்களாக 6-8 சின்னஞ்சிறு நாய்குட்டிகள் திரிந்து வருகின்றன. சா​லை​யோரம் என்பதால் அக்குட்டிகள் வாகனங்களில் அடிபடுவதற்கான வாய்ப்புகள் நி​றைய. த​யைகூர்ந்து அங்கிருந்து எடுத்துச் ​சென்று அந்த சிசுக்க​ளை காப்பீர்களாக, இடம் பற்றி அறிய என் ​கை​பேசிக்கு அ​ழைக்கவும் - 99.....84

அன்பாக,
​ஜெகநாதன்
மடிப்பாக்கம்

அன்பு ​ஜெகன்,

தகவலுக்கு நன்றிகள்! புளுகிராஸ் ஒரு அரசு சாரா தன்னார்வ அ​மைப்பாகும். எங்களிடம் மிகக்கு​றைந்த பணியாளர்க​ளே உள்ளனர். தற்சமயம் 4 முதலுதவி வாகன சாரதிக​​​ளே உள்ளனர். அவர்களும் விபத்துக்களுக்கு வி​ரைவதி​லே​யே முழு​மையாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆக​வே, நீங்க​ளே ஏன் அக்குட்டி நாய்களை தங்கள் ​கைப்பட எடுத்துவந்து எங்கள் காப்பகத்தினிடம் ​ஒப்படைக்கக் கூடாது?

அன்புடன்

புளூக்ராஸ்
​சென்​னை.

புளூகிராஸ்,

வி​ரைவான பதிலுக்கு நன்றி! இருந்தும் உங்கள் ஆ​​லோச​னை​யை ​செயல்படுத்த முடியாதவனாகி​றேன். ​தெரு​வோர நாய்குட்டிக​ளை ​தொடப்​போனால், தாய்நாயிடமிருந்து என்ன கி​டைக்கும் என்று உங்களுக்கு நான் விளக்க ​வேண்டியதில்​லை. அனுபவமுள்ள கரங்களால் மட்டு​மே இ​தை ​​செய்ய இயலும் என நம்பி​யே உங்க​ளைத்​ ​தொடர்பு ​கொள்கி​றேன். ஆக​வே விரைந்து வந்து அக்குட்டிக​ளைக் காப்பாற்றுங்கள். விபத்துக்கு பின் முதலுதவி வண்டி அனுப்புவ​தைக் காட்டிலும் விபத்​தைத் தடுக்க ஒரு காக்கும் கரத்​தை உட​னே அனுப்புவதுதான் சிறந்தது, அல்லவா?

ப்ளூகிராஸ்:
ஓ! தாயும் உடனிருக்கிறதா?

ஜெகன்:
என்​றே நம்புகி​றேன். வி​ரைந்து வர முடியுமா? குட்டிகள் அங்கிங்கு என சாலையில் திரிவதால் விபத்துவாய்ப்பு அதிகமாயிருக்கிறது.

ப்ளூகிராஸ்:
மன்னிக்கவும் ​ஜெகன். தாய் உடனிருப்பதால் குட்டிக​ளை பிரிக்க முடியாது. ஏனென்றால் குட்டிக​ளைப் பிரிந்த தாய் ​நோயுறும் :(
இருந்தும் உங்கள் ​கோரிக்​கை​யை காப்பக ​மேலதிகாரியிடம் ​தெரிவிக்கி​றோம். அவர் தக்க முடி​வெடுப்பார்.

---

இது​வே புளுகிராஸிலிருந்து ​பெற்ற க​டைசி மின்னஞ்சல். அப்புறம் உயிருள்ள நாய்க்குட்டிக​ளை காத்துச் ​செல்ல கரங்க​ளோ, அல்லது சில தினங்களில் அடிப்பட்டு ​செத்த குட்டிக​ளை அள்ளிச் ​செல்ல வாகன​மோ வர​வேயில்​லை!
அ​ரையடி உயர​​மேயிருந்த குட்டி​யொன்று வீட்டுக்கு அருகில் அடிபட்டு ​செத்துக் கிடந்தது. ​​பிற வாகனங்களால் ​மேலும் அரைபடாமல் இருக்க அந்த அரையடி சவத்​தை ஓரமாக தள்ளி​வைக்க மட்டு​மே என்னால் முடிந்தது. எஞ்சிய​ 3 - 4 குட்டிகள் இப்​போது நன்கு வளர்ந்து விட்டன. குறிப்பிட்ட வாகனங்க​ளை மட்டும் கு​ரைத்தும் துரத்தியும் அ​வை இன்னும் உயிர்த்திருக்கின்றன.

Wednesday, October 14, 2015

புலி எனும் மிகையதார்த்த சினிமா


சிம்புதேவன் அருமையான கார்ட்டூனிஸ்ட். ஆனந்தவிகடனில் வந்த அவரது புலிகேசி சித்திரங்கள் மூலம் அறிவேன். தமிழ்-கார்ட்டூன் எல்லைகளை விரித்துச் செல்லும் வன்மை கொண்டவர்கள் பட்டியலில் சிம்புதேவன் பெயரை நிச்சயம் பதிவு செய்யலாம். கிமுவில் சோமு போன்ற காமிக் (Comic)முயற்சிகள் அவரை தனித்து காட்டுகின்றன. இது போன்ற ஆக்கங்கள் தமிழ் இலக்கியத்தில் மிக குறைவாகவே இருக்கின்றன. இதை நான் எப்போதும் சொல்வதுண்டு: சிறுவர்களுக்கான இலக்கிய திறவுகோல் காமிக்ஸ் வசமே இருக்கிறது. ஒரு மொழியின் சித்திரக்கதைகள் குறைந்து போகுமென்றால் அத்தலைமுறையிலிருந்து தாய்மொழி இலக்கிய வாசிப்பு என்ற கதவு அடைக்கப்பட்டு விட்டது என்றே அர்த்தமாகிறது. இவ்வகையில் தமிழில் வரும் காமிக் முயற்சிகள் மற்றும் அதன் இலக்கிய சாத்தியங்கள் கவனத்தில் இருத்த வேண்டியவையாகின்றன.

ஓவியனின் சினிமா எப்போதும் பிற-சாதாரண வணிக சினிமாக்களிலிருந்து தனித்து நிற்கும். சத்யஜித் ரே-யிலிருந்து ஷங்கர் வரை உதாரணம் சொல்லலாம். ஒரு விஷுவல் தேடல் கொண்டதாக ஓவியன் கான்வாஸின் ஒவ்வொரு அங்குலத்திற்கும் எடுத்துக் கொள்ளும் கவனமாக திரைக்காட்சிகள் நிறைந்திருக்கும். இதை சிம்புதேவனும் நிரூபிக்கிறார். இவர் காமிக்ஸ் சாத்தியங்கள் கொண்ட ஓவியன் என்பதால் இதை எழுதுகிறேன். ஹாலிவுட்டின் ஏறக்குறைய அனைத்து சூப்பர் ஹீரோக்களும் காமிக்ஸில் இருந்து வந்தவர்களே. டிஸி (DC) மற்றும் மார்வல் (Marvel) காமிக்ஸ்கள் தாரை வார்த்த பாத்திரங்கள்தான் ஹாலிவுட்டின் பெரும்பான்மையான படங்களில் காண்கிறோம். இது தவிர பான்டஸி (Fantasy - கற்பனாவாதம் / மி​கையதார்த்தம்) மற்றும் அனிமேஷன் கதைகளுக்கான மூலங்களும் காமிக்குகளே! சித்திரக்கதைகளுக்கு அதீத வரவேற்பு மேற்கு நாடுகளில் எப்போதும் உண்டு. சிறுவர்களுக்காக படைக்கப்பட்ட காமிக்ஸ் பாத்திரங்கள்தான் இப்போதும் அனைவரும் விரும்பிப் பார்க்கும் ஹாலிவுட் படங்களின் கதாநாயகர்கள். சிம்புத்தேவனின் கிமுவில்-சோமு சித்திரக்கதை கூட இது போன்ற திரையுலக விரிதல் சாத்தியம் கொண்ட ஆக்கம்தான். ஆனால் தமிழ் சினிமாவானது, தமிழ் காமிக்ஸ் உலகம் போன்றே புதுமுயற்சிகளுக்கான முனைப்புகள் இன்றி சூம்பிப்போய் கிடக்கிறது.

இன்னமும் சூப்பர்-ஹீரோ அல்லது மாயாஜால கதைகள் என்றால் நமக்கு அது ஹாலிவுட் படங்கள்தான். நம்மூரில் சூப்பர்-ஹீரோ வரக்கூடாது; வரவும்முடியாது - நாம் நிறைய மின்கம்பிகள் கட்டி, ஏராளமாய் சாக்கடைகள் திறந்து வைத்திருக்கிறோம். பறந்து செல்லும் சூப்பர்களுக்கு இவ்விடம் சாத்தியப்படாது.மாயாஜாலம் என்றால் விட்டலாச்சார்யா வகையறாக்கள், அதைவிட்டால் அம்மன்களின் கிராபிக்ஸ் (பி, சி சென்டர்களில் வசூல் அள்ளும் - வேறென்ன வேணும்?) இதுபோன்ற நாமே அறியாமல் வகுத்துவிட்டிருக்கும் சில குறுகிய மனப்பான்மையால்தான் நம் கற்பனைசாத்தியங்கள் சூம்பிபோய் விட்டிருக்கின்றன. கிரிஷ், ரா1, வேலாயுதம், எந்திரன் மற்றும் முகமூடி போன்று சில அபூர்வங்கள் மட்டுமே இந்திய சினிமா வசமுண்டு. முற்றிலும் அரசு அலுவலக குமாஸ்தா ரீதியில் நவீன படைப்பாளிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். புது வகை கதைசொல்லல் அல்லது ஓவியர்களுடன் இணைந்து கிராபிக்ஸ்-நாவல் போன்ற அம்சங்கள் தமிழில் குறைவு - அல்லது இல்லை என்று கூட சொல்லலாம்.

பான்டஸியில் நம் மரபு சார்ந்த கதைகளையும் கதைக்களங்களையும் இழந்து விட்டு தலைமுறைகளாக மேற்கத்திய கதைகளுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறோம். தொலைக்காட்சி, திரைப்படம் மற்றும் வீடியோ கேம் போன்ற தளங்களில் மேற்கத்திய சிந்தனைகளின் ஆதிக்கத்திற்கு இதுவே காரணமாக இருக்கமுடியும். தொலைக்காட்சி கார்ட்டூன்களைப் பார்த்து வளரும் சிறுவர்கள் பிறகு அதன் தாக்கத்தில் வெளிவரும் ஹாலிவுட் படங்களையே விரும்ப முடியும். இது இவ்வாறாகவே புரோகிராம் செய்யபட்டு விடுகிறது. அதன்பிறகு அவர்களுக்கு ஹாலிவுட் படங்கள் மட்டுமே அளவுகோல். இதனாலேயே தாய்மொழி - தாய்நாட்டு படங்களை அந்த அளவுகோலால் சுலபமாக நிராகரித்து விடுகிறார்கள். சூப்பர்ஸ்டார் என்ற நிழலிருந்தும் கோச்சடையான் போன்ற படங்களின் தோல்விக்கு இதுவே காரணமாய் இருக்க முடியும். தொழில் நுட்ப மற்றும் அபரிமித முதலீட்டில் வெளிவரும் மேற்கத்திய படங்களின் உச்சத்தை எட்ட முடியாததால் நம்மொழிப் படங்கள் இன்னமும் அ.மா.அரைத்துக் கொள்ள வேண்டியதாகிறது.

இந்த அவலம் நீடிக்கின்ற தமிழ் சினிமாவில் சிம்புத்தேவனின் திரைப்படைப்புகள் சிறது ஆசுவாசத்தை அளிக்கின்றன. இம்சை அரசனிலிருந்து புலி வரை படைப்புகளில் மிகையதார்த்தம் மற்றும் மாயாவாதம் தொடர்வதை தேர்ந்த சினிமா விமரிசகர்கள் யாரும் மறுக்கமாட்டார்கள். புலி போன்ற சிறுவர்-பான்டஸி படத்தில் நடித்த விஜயின் துணிச்சலும் கவனத்தில் கொள்ள வேண்டியதே. இருந்தும் சிம்புத்தேவன் தனது இயல்பான மண்வாசனை கொண்ட கதைக்களத்திலின்று கழன்று ஹாலிவுட் தாக்கத்தில் புலி கதையை வடித்திருப்பதன் காரணம் வணிக ரீதியான அழுத்ததமாக இருக்குமோ? இருந்தும் துவளாத சுவாரஸ்யமாய் திரைக்கதையின் போக்கு இருக்கிறது. வான்-ஹெல்ஸிங்கில் (Van Helsing) வரும் டிராகுலா, பான்ஸ் லேபிரின்த் (Pan's Labyrinth) - தவளை மற்றும் ஒற்றைக் கண், மெலிஃபிஷியன்ட் (Maleficent) இன்னும் ஸிலீப்பிங் ப்யூட்டி Sleeping Beauty போன்ற படங்களின் தாக்கம் தெரிகிறது. இதன் காரணமாகவே நமக்கு ஹாலிவுட் அளவுகோல் நம்மையறிமால் வந்துவிடுகிறது. அசல் நம் மண்வாசனை கொண்ட கதையாக இருக்கும் போது கிராபிக்ஸ் ஒப்பீடு இரண்டாம் பட்சமாக போயிருக்க கூடும். கதையவில் புலி கம்பீரமாக இருந்தாலும் காட்சியமைப்பில் அது குன்றிவிட்டது.

சிம்புத்தேவன் படத்தில் வழக்கமாக ஒரு விமர்சன அரசியல் நையாண்டி வரும். இம்சை அரசனில் கோக் கம்பெனிகளை விமர்சித்திருப்பார். அறைஎண்.. கடவுள் படத்தில் ஸாப்ட்வேரில் வேலை செய்பவர்களை. முரட்டுசிங்கத்தில் புதையல் தேடும் போது வரும் குறிப்புகளில். இதில் சிலது கதைப்போக்குடன் ஒவ்வாமல் போவதை கவனித்திருக்கிறேன். அது திரைக்கதையின் வலுவை குறைக்கும் விதமான நையாண்டியாக மாறிவிடுகிறது. அதுபோன்றே புலியிலும் ஒரு இடத்தில் ஆல்பா-பீட்டா-காமா (நியூட்டன், ஐன்ஸ்டீன்) எல்லாம் வருகிறார்கள். இது கதை மீதான நம்பகத்ததன்மை நீர்த்துப் போக செய்துவிடுகிறது. இனி வருவது அனைத்தும் நையாண்டிவகை சினிமாதான் என்ற எண்ணத்துக்கு உந்தப்பட்டவர்களாகிறோம். இவை தவிர்க்கப் பட்டிருக்க வேண்டும்.

முக்கியமாக பான்டஸி கதை என்பதே ஒவ்வொரு காட்சியிலும் முற்றிலும் மாறுபட்ட கற்பனையை பார்ப்பவர்களின் பிரமிப்பு குறையாமல் நகர்த்திச் செல்வதுதான். இது ஒரு அரைமயக்க ரசனை அனுபவத்தை பார்வையாளனுக்கு கொடுத்து அவர்களின் பால்யத்தை மீட்கும் கவனமான வேலை. அதில் அர்த்தமற்ற நையாண்டி இடைசெருகல்கள் பார்வையாளளின் மயக்கத்தை குலைத்து அவனை ஒரு விமர்சகனான நிமிர்ந்து கொள்ள செய்து விடும். அப்படி விலகியவன் கதையை விமர்சிக்கவே செய்வான்.

கதையோட்டத்திலுள்ள சில தர்க்கரீதியான குறைகளை தவிர்த்து அணுகினால், சிம்புத்தேவனின் புலி தமிழ் சினிமாவில் உள்ள பான்டஸிக்காக வெறுமையை நிரப்பும் முயற்சியாக கொள்ளலாம். இது போன்ற ஆக்கங்கள் திரையுலகிலும் அதனினும் முதன்மையாய் தமிழ் இலக்கியத்திலும் அதிகம் வரவேண்டும். அதுவே வரும் தலைமுறைகளுக்கான தாய்மொழி இலக்கியத்திற்கான வழித்தடம்.

Monday, September 7, 2015

எமனுக்கு எமனும் ஏஞ்சலாவின் காப்பியும்


ஸ்காட்ச் பாட்டில் படம் போட்டு ஒரு வாட்ஸ்ஏப் செய்தி.. அதைத் தொடர்ந்தவாறே முந்தானை முடிச்சு தீபா 'அ' போட சொல்லித்தரும் படம் வருகிறது. பார்த்தால் ஆசிரியர் தின வாழ்த்தாம். ஸ்காட்ச் பாட்டில் டீச்சர்ஸ் பிராண்டு!!

ஆசிரியர் தினத்​தை​யொட்டி அப்படியே சில ஆசிரியர்கள் நினைவில் வந்து போனார்கள்...

அதிகம் நான் படித்த கிராம அரசு பள்ளி ஆசிரியர்கள். ஒரு ராணுவ ஒழுங்குடன் பள்ளிக்கூடத்தை நடத்துபவர்கள். பணிமூப்பு பெறும்வரைக்கும் தன் நடை உடை பாவனை என எதிலும் சிறு மாறுதலைக் கூட சமரசம் செய்து கொள்ளத் தெரியாதவர்கள்.

நானறிந்து ஒரு நடுநிலைப் பள்ளி ஆசான் - மிகுசிக்கனத்திற்கு ஒரு வாழ்வியல் உதாரணம் எனலாம். சைக்கிளில் கேரியர் வைத்துக் கொள்ளமாட்டார் - பிறர் உட்காரும் பாரத்தால் வண்டி கெட்டுவிடுமாம். கேரியர் இல்லாததால் தன் மதிய உணவு பாத்திரத்தை (சாப்பாட்டு கேரியர்) சைக்கிளின் - மைய இணைப்பு கம்பியில் ஒரு மஞ்சள் நிற நைலான் கயிறால் கட்டிக்கொண்டு வருவார். அந்த மஞ்சள் நிற கயிறும் அதை சாப்பாட்டு பாத்திரத்தை சுற்றியிருக்கும் விதமும் ஒரு நாளும் மாறியதில்லை. அவரது பள்ளி கடைசி நாள் வரை அதே மஞ்சள் நிற நைலான் கயிறுதான். கயிறின் ஒரு நூல் கூட பிரிந்து யாரும் பார்த்ததில்லை.

கிராமத்து பள்ளி ஆசிரியர்கள் அப்படிதான். வாழ்நாள் முழுக்க ஒரேவிதமான ஒழுங்கு - அதில் கொஞ்சம் தவறினாலும் தண்டனைதான். வகுப்பில் அவர் நுழையும் போது சாக்பீஸ்கள் வைத்திருக்கும் விதம், கரும்பலகையின் ஓரமூலையில் இருக்கும் தேதி வருகைப் பதிவு, மேசைக்கும் நாற்காலிக்குமான செமீ மிமீ இடைவெளி என அனைத்திலும் தீவிர ஒழுங்கை எதிர்பார்ப்பார்கள்.

அப்போதெல்லாம் ஆசிரிய மக்கள் வகுப்பறைக்கு வெளியேயும் ஆசிரியப் பணியை தொடர்ந்த காலம். நான் படித்த கிராமத்துப் பள்ளியில் தொலைக்காட்சி பார்ப்பதற்கு தடைவிதிக்கப் பட்டிருந்தது. கிராமத்தில் மொத்தம் இருந்தது இரண்டோ மூன்றோ டிவிக்கள்தான். அதிலேயேயும் கூட்டம் அதிமாகி விட்டால் வீட்டுக்காரர் அனுமதி மறுத்துவிடுவார். எப்படியிருந்தாலும் சிறுவர்களான எங்களுக்கு ஒளியும் ஒலியும், ஞாயிறு இரவுப்படமும் பார்க்காமல் இருக்க முடியாது. ஒருவழியாக இடம் பிடித்து உட்கார்ந்து கொள்வோம். படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் ஒரு வில்லன் வருவான் - டிவியில் அல்ல - அதற்கு வெளியே.ஆசிரியரால் பணிக்கப்பட்ட உளவாளி சிறுவன். அவன் பணி யார்யாரெல்லாம் டிவி பார்க்கிறார்கள் என்று பேர் குறித்துச் செல்வதுதான். அவனோ பேர் எழுதுகிறேன் பேர்வழி என கிட்டத்தட்ட முக்கால்படம் பார்த்துவிட்டுத்தான் செல்வான். டிவிக்கள் ஆதிக்கம் எல்லார் வீட்டினுள்ளும் நுழையும் வரை இந்த பேரெழுதும் படலம் தொடர்ந்தது அப்புறம் நின்று போனது.

வகுப்பைத் தாண்டியும் ஒரு ஆசிரியரின் கவனம் இருந்தது என்பதுதான் இதில் முக்கியம். ஆசிரியர் என்பது வெறும் பணி என்பதையும் மீறிய வாழ்க்கை முறையாக இருந்தது அப்போது. அதை தனது முழுமையான ஆளுமையாக கருதுவதால்தான் மாணவனிடமும் பள்ளியிடமும் அதீத ஈடுபாடு கொண்டிருந்தனர். அடித்தல் அடித்து துவைத்தல் போன்றவையெல்லாம் இது சார்ந்த வெளிப்பாடுகள்தான் என இப்போது புரிகிறது.

நான் படித்த ஒரு கிராமத்துப் பள்ளியில் பாடத்தைத் தவிர வேறு எது படித்தாலும் அடி உதைதான். அதிகம் போனால் செய்தித்தாளைப் புரட்டலாம். அந்தக் கிராமத்தில் அப்போது நானும் நண்பனும் மட்டும் ரகசியமாக காமிக்ஸ் புத்தகங்கள் வாங்கி படிப்போம். ஒருமுறை ஆர்வமிகுதியில் நண்பன் இரண்டு காமிக்ஸ்களை நூல் அஞ்சலில் ஆர்டர் செய்து விட்டான் - எனக்கும் சேர்த்து. அந்த குக்கிராமத்திற்குள் முதன்முறையாக பழுப்பு நிற அட்டையால் மூடப்பட்டு இரண்டு காமிக்ஸ்கள் வருகை புரிந்தன. நண்பன் கவனமாக வீட்டு முகவரி எழுதியிருந்தும், அஞ்சல் நிலைய அதிகாரி சந்தேகத்தின் பேரில் பள்ளி தலைமையாசிரியருக்கு அதை சேர்ப்பித்துவிட்டார்.

கிராமத்தில் இணையான ரேங்கில் இருக்கும் தலைமையாசிரிருக்கும் அஞ்சல்அதிகாரிக்கும் இதுபோன்ற பரிவர்த்தனைகள் சாதாரணம். எப்படியாயினும் மாணவ ஒழுக்கமே முக்கியம் அவர்களுக்கு. தலைமையாசிரியர் பழுப்புநிற அட்டைகளைப் பிரித்தார். உள்ளே 'எமனுக்கு எமன்' என்ற தலைப்பிலான புத்தம்புதிய லயன் காமிக்ஸ் எனக்கும் நண்பனுக்குமாக சிவகாசியிலிருந்து வந்திருக்கிறது. முழுதையும் படித்துப் பார்க்கிறார். அது முழுக்க முழுக்க போர்ப் பின்னணி கொண்ட படக்கதை. அதில் பெண்களே கிடையாது - மொத்தமும் (ஆண்) ராணுவ வீரர்கள்தான். இப்படியொரு வீரமும் சாகசமும் கொண்ட ராணுவக் கதையென்பதால் நாங்கள் அடியிலிருந்து தப்பித்தோம் என்று நம்பியிருந்தோம். ஆனால் பாருங்கள் ராணுவம் எங்களிருவரையும் ஏமாற்றி விட்டது - ஒரேயொரு இடத்தில் ஒரு பெண்மணி ராணுவ வீரர்களுக்கு காப்பி பரிமாறுவார். காமிக்ஸின் அந்த சிறிய படத்தில் அப்பெண்ணின் படமும் அருகே ஒரு வசனமும் இருக்கும்: 'என் மனைவி ஏஞ்சலா உங்களுக்கு காப்பி பரிமாறுவார்' அவ்வளவுதான். அதற்கப்புறம் காப்பி குடித்த ராணுவ வீரர்கள் துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டு சுடப் போய்விடுவார்கள்.

தலைமையாசிரியர் எங்கள் இருவரையும் அவர் அலுவலகத்திற்கு அழைத்தார். போனோம். 'வாங்க எமனுக்கு எமன்களா' என அழைத்து புத்தகங்களை கொடுத்துவிட்டார். அப்பாடா என்றிருந்தது. இருந்தும் கைகளை நீட்டச் சொல்லி பிரம்பால் ஆளுக்கொரு அடி கொடுத்தார். 'எமன்களா! பாடப்புத்தகம் படிக்காம என்ன காமிக்ஸ் வேண்டி கிடக்குது..? இதில மனைவி ஏஞ்சலா காப்பி பரிமாறுவாராம் காப்பி..' அப்போதிலிருந்து காமிக்ஸின் ராணுவ தோட்டாக்களையும் மீறி ஏஞ்சலாவின் காப்பியே இன்னும் நினைவிலேயே நிற்கிறது.

காமிஸ் புத்தகங்களை வாங்கிக் கொண்டுபின் அதை முழுதும் படித்தபின் நண்பன் சொன்னான். 'நல்லவேளை! எமனுக்கு எமனை ஆர்டர் பண்ணினோம்.. இதுவே புரட்சிப் பெண் ஷீலாவா இருந்திருந்தா நம்ம கதி என்னாயிருக்கும்?'

அவன் சந்தேகம் சரிதான். புரட்சிப்பெண் ஷீலாவில் முழுக்க முழுக்க ஷீலா கையில் வாளுடன் வருவார். அவரின் வாளை விட மிகவும் சிறிய மார்க்கச்சையும் அரைக்கச்சையும் அணிந்து புரட்சிகரமாக போர் புரிவார். அந்த காமிக்ஸ் மட்டும் தலைமையாசிரியர் வசம் சிக்கியிருந்தால் அவர் எங்க​ளை அடிக்கிற அடியில் காமிக்ஸின் புரட்சிப்பெண் ஷீலா சேலைக்கு மாறியிருப்பார்.

புன்னகையுடன் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

Wednesday, September 2, 2015

காடு அ​டைதல்

அன்று பெளர்ணமி. அது யாத்ரிகர்கள் பிரவேசிக்க அனுமதி மறுக்கப்பட்டிருக்கிற சமயம். இருந்தும் மறிக்கப்பட்டிருந்த நுழைவாயிலின் சிறிய இடைவெளியினூடே மலை ஏற்றத்தை ஆரம்பித்தோம். பலதரப்பட்ட ஆளுமைகள் அடங்கிய அலுவலக நண்பர்கள் குழுவாக அது இருந்தது. அதிகம் பேர் மலையேறிமுடிக்கணும் என்ற பூரணத்துவத்துவையே முதன்மையாக கொண்டு ஏறியதாக தோன்றியது. வேறுசிலருக்கு ஆன்மீகம்-சிவனடைதல் போன்ற எதிர்பார்ப்புகள்.  நானோ இப்பயணத்தை என் உடல்திராணியை அளவிடும் ஒரு செயலாகவே எடுத்துக் கொண்டேன். ஆனால் எனக்கோ மலையின் மூர்க்க வசீகரம் என் உடல்திராணி அளவிடும் நோக்கைத்தை நொறுக்கிவிட்டு என்னை கண்டு களித்து முடி என்றது. காட்டின் ஒவ்வொரு சப்தமும் உள்ளுக்குள் இறங்க ஆரம்பித்து விட்டது போலிருந்தது.

நெடுந்துயர்ந்த மூங்கில் புதருள் மோதி அலறும் காற்றின் ஒலி அளவிடமுடியாததாக இருக்கிறது. எல்லா மலைகளும், முகிலுரசும் ஏழாம் மலையுமாக நிலக்காட்சிகள் இயல்பு வாழ்க்கையிலிருந்து நம்மை பிய்த்து பிய்த்து எடுக்கிறது.

மலைவிட்டு இறங்கும்போது இருட்டிவிட்டது. பெளர்ணமி வெளிச்சத்தையும் அனுமதிக்காத காட்டு மரங்கள். காடு கண்விழிப்பது எப்போதும் இரவில்தான் போல - தன் ஒவ்வொரு தசையையும் புரட்டிப் போட்டு திமிறி எழுகிறது இரவில். வலுவுள்ள உயிர்கள் அவர்களுக்கு மட்டுமே புலனாகும் வழிகளில் உலாவ தயாராகின்றன. காட்டின் பாதைகள் எப்போதும் கட்புலனால் அடைய முடிவதில்லை; அவை எல்லா புலன்களாலும் அல்லது ஆறாவது புலனால் அடையக்கூடியதாகவே இருக்கிறது. பாதையறிவது என்பது காட்டின் சமிக்ஞைகளை புரிந்துணரும் செயலாகவே உணர்கிறேன்.

பசித்த வேட்டை மிருகம் கூட காட்டின் சமிக்ஞை இல்லாவிட்டால் பக்கத்திலிருக்கும்  உணவு உயிரை திரும்பிக்கூடப் பார்க்காது. அந்த சமிக்ஞை ஒரு சில்வண்டு சப்தமாகவோ தூரத்து நரியின் ஊளையாகவோ அல்லது ஒரு சிலந்தி வலையில் இருந்து சரியும் மழைத்துளியாவோ இருக்கலாம்.  ஒரு வேட்டை முதல் முளைவிடும் தாவரம் வரை, தானே சுரக்கும் ஊற்று அதனனின்று ஓடை பிறகு ஓடை அருவியாதல் வரை அனைத்தும் காட்டின் இயக்கமாவே இருக்கிறது. இவையனைத்தின் ஒருமித்த தொகுப்பாகவே காட்டை உணர்கிறேன்.

காட்டிருட்டில் திரும்பும் போது வழிகாட்டியாக வேறொரு நபர் சேர்ந்து கொண்டார். அடிக்கடி வெள்ளியங்கிரி வருபவர். அவருடன் வந்த சிலர் இரவை இரண்டாம் மலையிலேயே கழிப்பதாகவும் தான் மட்டும் அடிவாரம் சென்று காலை திரும்புவதாக கூறினார்.  அவருடன் வந்தவர்களை நான் கவனித்திருந்தேன். சடை விழுந்த சிகை மற்றும் தாடியுடன் கூடிய காவி ஆசாமிகள். வயது அதிகம் போனால் நாற்பதுக்குள். விட்டேத்தியான எங்கோ வெறிக்கும் கூர் விழிகள். இரவு முழுதும் சிவபானம், கதை, பாட்டு மற்றும் நெருப்பைச் சுற்றி ஆட்டம் என போகுமாம். காட்டு விலங்கு, காற்று-மழை என எதற்கும் அஞ்சாது விடியும் வரை நடக்குமாம். அப்படியொரு இரவை தவிர்த்து விட்டு இறங்குகிறோமே என்ற விசனம் கூட எனக்கிருந்தது. ஏன் இவர்களை காடு அப்படி இழுத்துப் போட்டுக் கொண்டிக்கிறது என்று யோசித்தவாறே நடையைத் தொடர்ந்தேன்...

என்றோ நிமிர்ந்து நடக்க ஆரம்பித்த காட்டு-மனிதன் தனக்கான வெளியான காட்டை விட்டு முதலடி எடுத்து வைத்தான். உலகின் மொத்த தசைகளையும் திருப்பி போடுவதாக அது இருந்தது. அதற்கப்புறம் தனக்கான வெளியை அவனே கட்டமைத்துக் கொண்டான். பிறகு காட்டுக்கு அவன் திரும்பவே இல்லை - அல்லது திரும்ப முடியவில்லை. காடு குறுக்கே வந்தால் அதை சிதைத்து தனக்கான வெளியாகவே கட்டமைத்துக் கொள்ள ஆரம்பித்தான். கொஞ்சம் கொஞ்சமாக காடு அவனுக்கு அந்நியமாகியது. காடு ஒரு ஆழ் நினைவாக அவனுள் மீட்க முடியாத ஆழத்தில் புதைந்து விட்டது. ஆனால் ஏதோ ஒரு இரவு அல்லது கனவு அல்லது பறவையின் ஒலி காட்டை அவனுள் எழுப்பிவிடுகிறது. எழுந்து கொண்ட மனிதனால் உறங்கமுடிவதில்லை. அவன் நடக்க ஆரம்பிக்கிறான். தனக்கான வெளியைவிட்டு காட்டை நோக்கி முதலடி வைப்பவன் பிறகு திரும்பிப் பார்ப்பதில்லை. அவனை மீண்டும் காடு எடுத்துக் கொண்டு விடுகிறது. காட்டின் ஒரு தசையாக இன்னுமொரு சமிக்ஞை அவனாகிறான்.

இப்படி ஒரு சிந்தை குறுக்கே ஓடியது. இதற்கு முன்தான் சித்த வைத்தியம் பற்றி ஒரு இடுகை எழுதியிருந்தேன். அதையொட்டி ஏன் மலைகள் பொதுவாக சித்தர்களின் கூடாரமாகவே காட்டப் படுகிறது என்றொரு யோசனை. காட்டுச் செடிகள் மற்றும் காட்டு மூலிகைகள்தான் சித்த வைத்தியத்தின் மூலம். பறிக்கிற ஒவ்வொரு காட்டு தாவரமும் காடு-மனிதன் என்ற சங்கிலியமைப்பையே பூடகமாக உணரத்துவதாக இருந்திருக்குமோ? இந்த இணைப்பை,ஆதித்தொடர்பை அதன் சூட்சுமத்தை உணர்ந்தவனே சித்தனாகிறானோ? தனக்கான சரியான, ஆதியான மற்றும் மரபான வெளி காடுதான் என்று கண்டுணர்ந்தவனே காட்டை நோக்கி முதலடி எடுத்து வைக்கிறான். அவனே சித்தனாகிறான். அவனால் காட்டை தாண்டி வரமுடிவதில்லை.

இரவு ஒன்பது மணிபோல அடிவாரம் சேர்ந்துவிட்டோம்.. இருந்தும் காட்டின் சில்வண்டின் ரீங்காரம் இறுக்கமாவே கேட்டுக் கொண்டிருக்கிறது. மலையை காட்டைத் திரும்பிப் பார்த்தேன். பெளர்ணமி நிலவு மேலெழும்பிவிட்டது. எத்தனையோ கண்களால் காடு எங்கோ பார்த்துக் கொண்டிருப்பது போலிருந்தது. விடைதெரியாத கேள்விக்கு பின்னான அமைதியாக அது இருந்தது. திரும்பி நடக்க ஆரம்பித்தேன் - நகரங்களை நோக்கி. காடு அங்கேயே இன்னும் இருக்கிறது.

நம் எல்லோருக்குள்ளும் ஒரு காடு தூங்கிக் கொண்டுதான் இருக்கிறது. கூடவே சமிக்ஞையால் உணரப்படும் காட்டின் வழித்தடமும் நினைவில் எங்கோ ஒளிந்திருக்கலாம்.

Tuesday, August 25, 2015

சித்த வைத்தியம் - சில குறிப்புகள்


சித்த வைத்தியம் - சில குறிப்புகள் (அவசியம் படிக்கணும் அருமை நேயர்களே!)

1. சித்த வைத்தியர்களை இருவகைகளாக பிரிக்கிறார் மேலமலை காட்டுச்செடி சாறுபிழிந்த ஓலைச் சித்தர். முதல்வகை முழுக்க நரைத்த தாடி கொண்ட வகுடுமுனி வகையறாக்கள். மிகவும் பொறுமைசாலிகள். உதாரணமாக வல்லாரைக் கீரையைப் பறித்து லேகியப் பக்குவம் சொல்லி முடிப்பதற்குள் கீரை பொடித்துவிடும். இரண்டாம் வகை வல்லக்கோட்டை பகட முனி வகையறாக்கள். தாடியின் நீளத்தை பொறுத்து பொறுமை குணம் கொண்டவர்கள். சீராக ஆங்கிலமும் பிற மருத்துவ தத்துவங்களும் கூட கைவரும்.

2. உங்களுக்கே தெரியும்: தமிழின் அ​னைத்து முன்னணி ​தொ​லைகாட்சிக​ளெங்கும் வலப்பக்கம் ஒரு தாடியும் இடப்பக்கம் ஒரு லேடியுமாக சித்த மருத்துவம் விளம்பர இடைவெளிகளிடையே காலையில் ஒளிபரப்பாவது. இதில் விசேஷம் என்னவென்றால் நீங்கள் ரசத்திற்கு பூண்டு தட்டுவதை வாயை மூடிக்கொண்டு செய்தால் அது சாதாரண சமையல் ஆகிறது (அதுக்கு டிவியில் வேற டிபார்ட்மெண்ட்டு உண்டு)..அதையே பூண்டின் தாவரவியல், உயிரியல் மற்றும் பொறியியல் பெயர்களை சொல்லிக் கொண்டே கல் குழவியில் பொறுமையாக இடித்தால் அது சித்த மருத்துவமாகிறது.

3. தமிழர்களின் தலைமைப் பண்புகளில் முக்கியமானது ஒன்று: பாட்டி மடியில் போட்டுக் கொண்டு சொன்ன கதையை அப்படியே பாஹுபலி என்ற பெயரில் சினிமாவாகப் பார்த்துவிட்டு 'ச்சே ச்சான்ஸே இல்லப்பா! இங்கிலீஷ்காரன் பிச்சை வாங்கணும்' என்று தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதுதான். சித்த வைத்தியத்திற்கும் இது கச்சிதமாகப் பொருந்தும். நாமறிந்த பாட்டி வைத்தியத்தையும் ஒரு தாடிக்காரர் தவணை முறையில் வார்த்தை-வார்த்தையாக தொலைக்காட்சியில் சொன்னால்தான் நாம் கவனித்து குறிப்பெழுதுவோம். நெஞ்சு விடைக்க 'முடக்கத்தான் கீரை ஒரு பார்ஸேல்ல்' என்று கீரைக்காரம்மாவிடம் சொல்லி வைப்போம்.

4. ஒரே சித்த மருந்திற்கு ஒரு வைத்தியக்காரர் சொன்ன அதே பக்குவத்தை பிற வைத்தியரிடம் நீங்கள் எதிர்பார்க்கக் கூடாது. எவ்வளவு ஆத்திரமான சண்டையென்றாலும், கராத்தே வீரர்கள் சண்டைக்கு முன் உன்னோட ஸ்கூல் என்ன? ஸ்டைல் என்ன? என்பனவற்றை விசாரித்துவிட்டுதான் வீடு கட்டவே தொடங்குவார்கள். அது போலவே சித்த சிலபஸும் பல பல வகைகள் உண்டு. கிள்ளி எடுத்தல், வேரோடு பிடுங்குதல் என தாவரக் கொலையிலேயே  வைத்தியருக்கு வைத்தியர் வேறுபாடுகள் உண்டு. எல்லாம் சித்தமயம்.

5. புரிந்து கொள்ளுங்கள் அரு​மை ​நேயர்க​ளே.. நம் உடலின் வாதம் - பித்தம் - கபம் இதை சரியான விகிதத்தில் வைக்கவே வைத்தியர்கள் பெரும்பாடு படுகிறார்கள். பசுநெய்யில் புளிவிடுவது, இஞ்சியை தேனில் உரைப்பது, வெள்ளை வெங்காயத்துடன் மாதுளஞ்சாறு பிழிவது, விளாம்பழத்துடன் வெல்லம்இடிப்பது என இதெல்லாம் நம் வா-பி-க கட்டுப்பாடுக்காக வைத்தியர்கள் தங்கள் உடலையும் ஆன்மாவையும் பரிசோதனையாக்கி நமக்குத் தந்தவையாகும். ஆகவே, எந்த வைத்தியர் என்ன எப்படி எவ்வளவு சாப்பிடச் சொன்னாலும், நம் இன்னபிற நோய்த்தன்மைகளையோ அல்ல பிற மருத்துவ காரணிகளையோ கண்டுகொள்ளாமல் ஒரு விழுது வாய்க்குள் விட்டுக்கொள்ளவும்.

6. சித்த வைத்திய முறையில் சாதிக்க முடியாதது அல்லது குணமாக்க முடியாது என்று ஒன்று இல்லவே இல்லை. எளிமையாக சொல்லவேண்டுமென்றால் கொசகொச கூந்தல் முதல் இந்திரிய நஷ்டத்தை சரிகட்டும் லேகியம் வரை அனைத்தும் இங்குண்டு. நீங்கள் எத்தனை மண்டலங்கள் மருந்து உட்கொண்டும் கொசகொச கூந்தலோ அல்லது இந்திரிய நஷ்ட ஈடோ கிடைக்கவில்லை என்றாலும் அகத்தியர் அருளிய சித்தத்தை குறை கூறலாகாது. உங்கள் உடலமைப்பு அல்லது நரம்பு மண்டலம் இந்த வைத்திய முறைக்கு உகந்தாக இல்லையென்று நீங்களே உங்களை சமாதானம் செய்து கொள்ளவேண்டும்.

7. அலோபதியில் தீராத நோய்கள் கூட இங்கு தீர்த்து வைக்கப்படும். எதுவாயினும் உங்களின் மனம் தளராத நம்பிக்கையும் தொடர்ச்சியாக மருத்துவரை சென்று பார்ப்பதுமே முக்கியம். மருத்துவர் அநேகமாக  சிசிஆர்எஸ் அல்லது சிசிஆர்ஐ மூலம் சித்த வைத்தியமும் கூடவே வர்மக்கலை, யுனானி, சேற்று தெரபி அல்லது மாற்று மருத்துவத்தில் டிப்ளமோவும் வாங்கியிருக்கக் கூடும். ஏதோவொரு கலவையான அணுகுமுறையில் ஏதாவது ஒரு சுபதினத்தில் உங்கள் நோய்க்கான சிகிழ்ச்சை​யை அவர் கண்டறியக் கூடும். ஆகவே பொறுத்திருங்கள்; பொறுமைதான் சித்த-நோயாளியின் முக்கிய பண்பாகும்.

Wednesday, July 22, 2015

ஒரு நிலக்காட்சி ​செத்துப்​போனது

Kaladi Jagan

தெண்டபாணி மாமா இறந்து விட்ட தகவல் அப்பாவிடமிருந்து கிடைத்தது. மாமா எனக்கு 5 வருடங்கள் மூத்தவர். இந்த வருட இடைவெளியோடு அவரது மரணத்தை நினைத்துப் பார்க்கும் போது வித்யாசமான துயரம் தாக்குகிறது. கூடவே, குடியால் செத்தவர்கள் நிறைய பேர் நினைவுக்கு வருகிறார்கள்.
மாமா இப்போது இறந்திருக்க வேண்டியதில்லை. மனைவி, 7 மற்றும் 5 வயதுகளில் இரு மகன்கள் என வாழ நிறைய சங்கதிகள் அவருக்காக காத்திருந்தன.

எக்கணமும் தெண்டபாணி செத்துப் போகலாம் என்ற தகவலையே சொந்தங்களும் நண்பர்களும் தெரிவித்தவாறு இருந்தன. அவரிடம் பேசவும் கேட்கவும் என நிறையவுண்டு; நெடிய ஒற்றையடிப் பாதையும் உடன் வரும் வாய்க்காலும் என தேங்கி விட்ட நிலக்காட்சிப் போன்ற உரையாடல். தமது உரையாடலை ஒரு நிலக்காட்சியாக நினைவூட்டும் நபர்களில் மாமாவுக்கும் ஒரு இடமுண்டு. அவர்கள் உயிருடன் இருக்கும் வரை ஓவியத் தெளிவாகவும் செத்தபிறகு மனதை பிசையும் இசையுமாக ஆகிறார்கள்.

சாவதற்கு சில தினங்கள் முன்பு சென்று பார்த்து விட்டு வந்த அம்மா சொன்னது: அவன் உருவம் ஒரு குழந்தை அளவுக்காக சிதைந்து விட்டிருக்கிறதாம். வெறும் பழச்சாறு மட்டும் உட்செல்கிறதாம். அதுவும் பெரிய பாட்டிலாயிருந்தால் தூக்கிக் குடிக்க முடியாது என சிறு பாட்டில்களாய் வாங்கி கொடுக்கப்படுகிறதாம்.

எப்போதோ மாமா சொன்னது: கிராமத்தில் அரசு மருத்துவ குழாம் ஆரோக்கிய குழந்தைகளுக்காக நடத்திய போட்டியில் பரிசு வென்ற கொழுகொழு கிராமத்துக் குழந்தையாம் அவர். வருடங்களுக்கு முன்பு பார்த்தவரை அதற்கான அடையாளங்கள் கொண்டவராகவே இருந்தார். ஆல்கஹாலில் உருகும் வரை அப்படித்தான் இருந்தார்.

திருமணம் எப்போதும் சில கதவுகளைத் திறக்கவும் பல ஜன்னல்களை மூடவும் வைக்கிறது. மாமாவுக்கு அப்படி மூடிய அல்லது மூடப்பட்ட ஜன்னல்களில் நண்பர்கள் மற்றும் சில சொந்தங்களும் மறைய வேண்டியதாயிற்று. அரசு வேலையும் ஆல்கஹாலுமாக புதுக் கதவுகள் தாமே திறந்து கொண்டன.

குடிப்பார்.. குடிப்பதால் எழும் சிந்தனையூக்கங்களை ஆச்சரியத்துடன் பார்ப்பார்.அதன் பிறது பேசுவதெல்லாம் தத்வார்த்தமாக, தன்னை மீறி கொப்பளிக்கும் பேரறிவு ஆளு​மையாக உருவகித்துக் கொண்டார். அந்த சிந்தனைகளை எழுப்பும் திறன் இத்திரவத்திற்கு மட்டுமே உண்டு என்றும் நம்பத்தொடங்கினார். படிப்படியாக தன் இயல்புகளிலிருந்து கழன்று நிற்கும் தனது குடி-மனிதன்தான் தன்னினும் சிறந்த அறிவாளி என அதை தீவிரப்படுத்த முனைந்தார். ஆனால் அவரே அறியாமல் குடி-அறிவாளி பிம்பத்தை அடித்து நொறுக்கி பிறர் புகழ்ச்சிக்கும் பிறகு இரக்கத்திற்கும் ஏங்கும் குடி-உத்தமன் முன் வந்து நின்றான்.

சுயஇரக்கத்தை விட நேசிப்புக்குரிய புண் வேறு எதுவும் இருக்கமுடியாது. ஒரு நோய்த்தன்மையுடன் மாமா தன்னை ஒரு குடி-உத்தமனாக உலகத்தின் முன் நிறுவிக் கொண்டார் எனப்படுகிறது. முழுச்சம்பளத்தையும் டாஸ்மாக்கில் கரைப்பது; தனியாளாக கடைக்குள் சென்று புதுப்புது நண்பர்களை உற்பத்தி செய்து கொள்ளவதும் சாத்தியமாயிற்று. யாருக்கும் சாத்தியப்படாத இரவும் நட்பும் செலவும் அவருக்கு இயல்பாகின.

குடியர்களுக்கு காலை வெளிச்சம் எப்போதும் பதட்டமானது. தான் போதையில் செய்த ஆட்டங்களை பிறர் சொல்ல கேட்க மனம் நொறுங்கிப் போகும். தம் போதை தவறுகளை களைவதற்காகவே சிலர் முழு நேரக் குடிக்கு அடிமையாகிறார்கள். மாமாவை எது ஆட்கொண்டது என தெரியவில்லை.. அதை தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை.

கடைசியாக அவரிடம் பேசியது நினைவுக்கு வருகிறது:

நான் ஊர் சென்றிருந்த ஒருநாள். காலை 7 மணியளவில், ஒரு ஷட்டர் மூடப்பட்ட கடை வாசலில் அமர்ந்து பேசினோம்.. அப்போதே குடித்திருந்தார். மீதி சரக்கு தன் யமஹா வண்டியில் இருக்கிறது என்றார். கைகளில் கன்னங்களில் சிராய்ப்புகள். புதுக்காயங்கள் போல - ஏறு​வெயிலில் ரத்தம் மினுங்கியது. ஏன் என்று கேட்டதற்கு அதற்கு முந்திய இரவு குடியில் வீடு திரும்பும்போது சறுக்கியிருக்கிறார். அருகிலிருந்த யமஹா உண்மையென்றது.
'நான் சாப்பிடறதே இல்லடா.. காலையிலிலேயே குடிக்க ஆரம்பிச்சிரதுதான்.. என்ன பண்ண?'
'ஏன் இப்படியிருக்கீங்க.. குழந்தைகளை நினைச்சுப்...'
உக்கிரமாக சிகரெட்டை இழுத்தவாறு
'எங்கே? எல்லாம் அவ்வளவுதான்.. என் வேலை அவங்களைக் காப்பாத்திரும்டா.. பதினெட்டு லட்சத்து வீடு கட்டியாச்சு.. அதவிடுடா..'
'ஆபிஸ்ஸாவது போறிங்களா?'
'என்ன எவண்டா கேள்வி கேட்பான்? டியிஓ-விலிருந்து ட்ரெஷ்ஷரி வரைக்கும் நான் சொன்னா எது வேணாலும் செய்வாங்க. தெண்டபாணி பைல் வொர்க் பர்பெக்ட்டுன்னு எல்லாருக்கும் தெரியும். ஆபிஸ் ஒரு மேட்டரேயில்ல'
சட்டென்று எழும்பி வண்டி முன் சீட் கவரிலிருந்த சிறு புட்டியை உருவினார்.
'மாமா.. வேணாம் இப்பவே குடிச்சிருக்கீங்க.. வைங்க'
'ம்.. அப்படிங்கிறியா? ரைட்டு. சரி வா போவோம்'
'ஆமா காலையில எதுவும் சாப்பிடலியா?'
ஒரு மாதிரியாக ஏளனமாகப் பார்த்துச் சிரித்தார்.  அதுதான் மாமாவுடனான க​டைசி உ​ரையாடல் என நி​னைக்கி​றேன்.
அதற்கப்புறம் தெளிந்த நிலைக்கு வரவே கூடாது என்பது போல குடித்துக் கொண்டேயிருந்தார். ஊர் சென்ற போதேல்லாம் அவரைப் பார்க்க முடியவில்லை அல்லது பார்க்க எனக்குப் பதற்றமாயிருந்த​தோ?

எனக்கு வந்து சேர்ந்த செய்திகள் எல்லாவற்றிலும் அவர் குடித்துக் கொண்டேயிருந்தார்.. காயங்கள் சம்பாதித்துக் கொள்பவராக இருந்தார். குடும்ப அமைப்பிலிருந்து விலகியவராக, பணியிலிருந்து நீண்ட விடுப்பு, பணமுடை, குடிக்காக மற்றவரிடம் கையேந்துபவராக இப்படிப்பட்ட மாமாவைத்தான் அனைவரும் முன்வைத்தனர்.

அப்போதெல்லாம் நீண்ட நிழலாக ஒற்றையடிப் பாதையும் உடன் வரும் வாய்க்கால் என்ற நிலக்காட்சியை நினைவிலிருத்தப் பாடுபடுவேன். மீண்டும் மாமாவுடனான ஒரு உரையாடல் அதை மீட்டுக் கொடுக்கும் என நம்பினேன்.

அந்த உரையாடல் நடைபெறவேயில்லை.

இப்போது மாமா குடிக்கும் சிந்தனைக்குமான தொடர்பை தப்பர்த்தம் செய்து கொண்டு செத்தவர்கள் பட்டியலில் ஒருவராக சேர்ந்தும் கொண்டார்.

Tuesday, March 31, 2015

​மைக் என்ற மந்திரக்​கோல்



மகளுக்கு ப்ரிகேஜி கொஞ்சம் சீக்கிரமே தொடங்குவதாக பள்ளி அறிவித்துவிட்டது. இரண்டு வயது முடிந்து 2 மாதம் 24 நாட்கள் 7 மணி நேரம் மட்டுமே ஆகியிருக்கிறது மகளுக்கு! நாம் சொல்லும் அனைத்து வாக்கியங்களையும் அப்படியே உள்வாங்கி, அதன் முதன் அட்சரத்தை மட்டும் பேசும் அளவுக்கு நாவன்மை வந்துவிட்டது. 'அதற்குள் எப்படிய்யா ப்ரிகேஜி?' என்று யோசிப்பதற்குள், பள்ளியில் இருந்து தபால். 'ஓரியண்டேஷன் ஸெஸன் வாங்கோ' என்று கூவியது. அதிலும் ஒரு டிஸ்கி வேறு: குழந்தையைக் கூட்டிக்கொண்டு வரக்கூடாதாம்.. ஒன்லி பேரண்ட்ஸ் மாத்திரம்!

மாமியார் வசம் மகளையும் மகனையும் ஒப்படைத்துவிட்டு கிளம்பினோம். பச்சையம் சுருக்கும் சென்னை வெயிலில் பள்ளிக்கூடம் அடைந்தோம். ஏற்பாடெல்லாம் பிரமாதமாகவேயிருந்தது. மேடையிலிருந்து குத்துப்பாட்டு ரம்மியமாக ஒலித்துக் கொண்டிருந்தது. இதே பள்ளியின் பிரதான வளாகம் நகரின் வேறு பகுதியில் இருக்கிறது. இது புதிதாக அமைக்கப்பட்ட சுட்டி வளாகம். ப்ரிகேஜி டு யுகேஜி வரை மட்டும். அருமையான இரண்டு மாமரங்கள் மற்றும் இதர மரங்கள் சூழ்ந்த குளுகுளு வளாகம்.. பிள்ளைக்களுக்கேற்ப பெரிய திடல் அதில் விளையாட்டு அம்சங்களும் நிறையவுண்டு. ஜீன்ஸ் மற்றும் ரோஜாப்பூ வண்ண டாப்ஸ் சீருடையாக கொண்ட ஆசிரியைகள். பிள்ளைகளுக்கும் ரோஜாப்பூ வண்ண சீருடை என பிங்க் பிராந்தியமாக மினுங்கியது. ஸ்கூல் ஃபீஸ் உங்கள் யூகத்திற்கு விடப்படுகிறது.

மேடை களைகட்ட ஆரம்பித்தது. பள்ளியின் டீன், பிரின்ஸி, கோஆர்டினேட்டர் (இப்படி பல பதவிகள் தற்போதைய பள்ளிகளில் உண்டு) என ஒவ்வொருத்தரும் மைக்கைப் பிடித்து அதிகம் ஆங்கிலம் கொஞ்சம் தமிழ் என உரை முடித்தனர்.

நாம் தடுத்தும் நம் காதுகளில் சில காமடி வெடிகளை கொளுத்திப் போட்டு விடுகிறார்கள். ம்.. உங்களுக்கும் வைத்துக் கொள்ளவும்.. மகள் படிக்கும் பள்ளி.. பீஸ் வேறு கட்டியாகி விட்டது!

1. கார்ப்பரேட்டுகளில் வேலை செய்பவர்களை பொதுக் கூட்டங்களில் சுலபமாக கண்டு கொள்ள முடிகிறது. மைக் வைத்திருப்பவர் குட்மார்னிங் சொன்னதும் கூட்டத்திலிருந்து ரிப்பீட்டாக குட்மார்னிங் சொல்லுவார்கள் பாருங்கள்.. அவர்கள் எல்லாமே ஏதோவொரு கார்ப்பரேட்டாக இருப்பார்கள்!

2. கூட்டத்தில் சும்மா உட்கார்ந்து கொண்டே ஏதாவது காமடி நம்மால் செய்ய முடிகிறது எனலாம். யார் எது பேசி முடித்தாலும் கைத்தட்டல்தான். டீன் சொன்ன (ஊர் உலகமெல்லாம் மேய்ந்து வந்த) வாட்ஸ்ஏப் ஜோக்காகட்டும், பின் பேசியவர்களுக்காகட்டும் கேரண்டியாக கைத்தடல்கள்தான். அது போகட்டும் அதற்கப்புறம் வந்த பெரிய தொந்தி டாக்டர் ஒருவர் சீரியஸாக ஆரோக்கிய வாழ்வு, சமச்சீர் உணவு, குழந்தைகளுக்கு உகந்த உணவு என மருத்துவ தகவல்கள் சொல்லி முடித்தார். வாட்ஸ்ஏப் ஜோக்குக்கு தட்டிய மாதிரியே இதற்கும் கைத்தட்டல்கள்!

3. நிகழ்ச்சி வந்திருந்த சில பெற்றோர்களை மேடைக்கழைத்து பேசச்சொன்னார்கள். ஃபீட் பேக் போலிருக்கிறது. நிறைய பேர் பேச தயாரித்துக் கொண்டு வந்திருந்தார்கள். நல்ல நகைச்சுவையாக இருந்தது. ஒருவர் வணக்கம் சொல்லியதும் முதல் காரியமாக அவர் கஷ்டப்பட்டு பெற்ற பட்டங்களின் வரிசையை விளக்கினார். அக்கல்விமான் தினமும் பள்ளியொட்டிய சாலையில் நடை உலா போவார் போலிருக்கிறது. அவர் கண்களில் இப்பள்ளியின் பசுமை தென்பட்டு விட்டது போல.. அதை மெச்சும் பொருட்டாக அவர் இயம்பியது: நான் இப்பள்ளியை ஒட்டிய சாலையில் தான் தினமும் மாலையில் நடந்து வாக்கிங் செல்வது வழக்கம்...

4. மேடைப் பேச்சு ஒரு தனி இலாகா.. அதை அனைவரும் ரசிக்கும் படி செய்வதில் 50 சதவீதம் மட்டுமே பேச்சாளரிடம் இருக்கிறது. பேசும் பொருள், நேரம், மேடை, சுற்றுவெளி மற்றும் கூட்ட மனப்பான்மை இப்படி இதர காரணிகளும் சாதகமாக அமைந்தால் மட்டுமே, ஒரு சிறந்த பேச்சு கிடைக்கப் பெறுகிறது. நம்மில் நிறைய பேருக்கு மேடை வறட்சியுண்டு. ம்..  மைக் எனக்கு வராதா என்ற ஏக்கத்துடனே நிறைய உன்னத கருத்துக்களும் சொற்பொழிவுகளும் நம் தொண்டைக்குழிக்குள்ளே புதைந்து கிடக்கின்றன போலும். மைக்கைப் பெற்ற மதர்களும் சரி பாதர்களும் சரி கிராண்ட் பாதர்களும் சரி.. மடைதிறந்து பாயும் நதியாகவே இருக்கிறார்கள்! மேடைப் பேச்சு பல தலைமுறைகளாக தொடரும் ஏக்கம் எனப் புரிகிறது.

5. கட்டிடங்கள் அல்லது ப்ராண்ட் வேல்யூ போன்ற அம்சங்களாலேயே பள்ளியின் தரம் நிர்ணயிக்கப் படுவது போல ஒரு மயக்கம் நிலவுகிறது. ஆசிரியர்களை மறந்து விடுகிறோம் போல. அரசு பள்ளி ஆசிரியர்கள் தரமுணர்த்த விருதுகள் உண்டு. தனியார் பள்ளிகளில் இது போல ஏதாவது உண்டா, தெரியவில்லை. மாணவர்கள் ஒவ்வொரு வகுப்பு தாண்டும் போதும் ஆசிரியர்கள் மறக்கப்பட்டு விடுகிறார்கள். எனக்கு என் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் நினைவுக்கு வருவதுண்டு. அவருக்கும் என்னை நினைவில் கொள்ள வாய்ப்புண்டுதான் - நல்ல மாணவனாகத்தான்.

6. ​டெட்சுகோ குரோநாயகி-யின் (Tetsuko Kuroyanagi) டோட்டா சான் - ஜன்னலில் ஒரு சிறுமி என்று ஒரு ஜப்பானிய நாவல் உண்டு. அதில் பள்ளியே கைவிடப்பட்ட ரயில் பெட்டிகள்தான். ஆனால் மனதில் இன்னும் பயணித்துக் கொண்டேயிருக்கும் பள்ளி. நல்ல பள்ளிகள் அடையாளப்படுவது கட்டிடங்களால் அல்ல என்று தோன்றுகிறது.

Wednesday, March 11, 2015

சிவாவை அறிந்து கொள்ளுதல்


அன்பிற்குரிய நீங்கள் சிவா பற்றி தெரிந்து கொள்ளுதல் முக்கியம் என்று தோன்றியதால் இதை எழுதப் பணித்தவனாகிறேன். காற்று என்பது தென்றல், வாடை, புயல், சூறாவளி என்று பல வடிவங்களில் வரும் போகும் என்று மட்டும் நம்பி இருந்தவனிடம், 'இல்லே ஜெகா.. இப்பெல்லாம் காற்று இன்கம்மிங் கால், அவுட்கோயிங் கால் அப்புறம் குறுஞ்செய்தி சிலசமயம் எம்எம்எஸ் போன்ற வடிவங்களிலும் வ. போகும்' என்று சொன்னவ.... னகரமா இல்லை ரகரமா என்று புரியவில்லை. வயதில் என்னை விட 10 கூடுதலாகவும் மனதில் 15 பருவங்கள் குறைவாகவும் இருப்பவரை எப்படி அழைப்பதென்று தெரியவில்லை.

சிவா தான் பிறந்து வளர்ந்த ஊரில் மிகு குடிபோதையில் மிதந்து சென்றாலும் யாருக்கும் எந்த வித்யாசமும் தெரியாது. ஏனென்றால் மிக நிதானந்தில் சாதாரணமாய் நடந்த வரும் சிவாவே ஊர்க்காரர்களுக்கு மப்பும் மந்தாரமுமாய் தெரிந்ததே காரணம். இதையொட்டி நீங்கள் சிவாவை ஒரு குடிகாரன் என்று தப்பர்த்தம் புரிந்து கொள்ள வேண்டாம். சிவா எல்லா காலங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லா ஜனங்களிடமும் ஒரே மாதிரியாக கால் பின்னப் பின்ன நடந்து திரிகிறான்.

நீங்கள் புதிதாக அறிமுகப்படுத்தப் போகும் நண்பருக்காக கைக்காசுக் கொடுத்து ரோஜாப் பூ வாங்கி அதை புது நண்பனிடம் 'பாஸ்.. உங்களப் பத்தி ஜெகா நிறைய சொல்லியிருக்கான்..' என்று பணிந்து மலர் கொடுத்து அறிமுகமாகிக் கொள்வான். நண்பர் கையில் பூவோடு நம்மை திகிலாய் பார்ப்பார்.

இரைச்சலான பேருந்துப் பயணத்தில் ஒருமுறை, யப்பா, பின்சீட்டு பெண்கள் பேச்சு எவ்வளவு தாள நயத்தோடு இருக்கு, கேட்டியா? நிச்சயம் தஞ்சாவூர்காரர்கள்தான் என்றான்.

ஒருமுறை இவன் கதையைப் படித்துப் பாராட்டி கடிதம் எழுதிய ஒருவரை அவர் வீட்டுக்கே சென்று சந்தித்தோம். தமிழ் வாசக மனங்களின் போக்குக்கு அவரும் விதிவிலக்கல்ல.. தினசரி வாராந்தரிகளுக்கு வாசக கடிதம் எழுதுபவர்.. பிரசுரமானதை வெட்டி ஒட்டி பாதுகாத்துக் கொள்ளுமம் வாசகர் அவர். காபி டீ உபசரிப்பெல்லாம் முடிந்த பின், விடையனுப்பும் போது காசு ஏதும் வேண்டுமா என்று கேட்டார். திக்கித்து சார் அப்படி எதுவும் வேண்டாம்.. உங்கள் வாசக கடிதத்துக்காகதான் பார்க்க வந்தேன் என்ற எளிய உண்மையை குரல் கம்ம விளக்கி விடைபெற்றான் ஒரு படியேறிய படைப்பாளியாக.

ஆசைக்கடலில் தேடிய முத்து என்று பாடல் முணுமுணுத்தால், ஏன் கடலில் அமுத்துறதிலதும் தேடி அமுத்துற என்பான்!

எழுதும் கதையில் இடையிட்டு நாமாக ஏதாவது திருத்தம் சொன்னால், அட பிரமாதமாயிருக்கேப்பா.. அப்படியே எழுதுவோம் எனும் எளிய படைப்புக் கடவுள்!

செம்புலப் பெயநீராக பழகும் நண்பர் குழாமுக்கு ஏற்ப பேசும் திறனாளி..

எதிர்வரும் பெண்ணை, அவள் கையுளுள்ள நோட்டை, நோட்டின் அட்டையிலுள்ள டெண்டுல்கரை என அனைத்தையும் நொடியில் உள்வாங்கி, சப்தமாக, டெண்டுல்கர்கள் வாழ்க என்பான். அப்பெண் குறுநகைப் பூத்து நகர்வாள் உடன்வரும் நமக்கு எதுவும் புரியாது - சிவா விளக்காமல்.

உலகின் எல்லா கணங்களையும் எல்லா நிறங்களையும் பேதமற காதலிக்கும் பித்தன்.

Tuesday, March 10, 2015

ஜிம் - சில குறிப்புகள்


மனித உடல்கள் நிலத்தொடர்பு கொண்டவை. காக்காஸியன் உடலமைப்பு, மங்கோலிய, ஆப்பிரிக்க அல்லது இந்திய உடலமைப்புகள் வெவ்வேறு விதமாக நிலத்தைக் கொண்டு பாகுபடுத்த முடிகிறது. ஆனால் உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியம் சார்ந்த நடைமுறைகள் காக்காஸியன் (அமெரிக்க அல்லது ஐரோப்பிய) அளவுகோல்களையே முன்வைக்கின்றன.

நெடுந்துயர்ந்த அல்லது நோஞ்சான உடலே ஆரோக்கியமானது போன்ற பிம்பத்தை ஏற்படுத்த முயல்கின்றன. உடல் பருமனைக் குறைக்க, ஜிம்முக்குப் போகமலேயே என்று பல சுதிகளில் மொத்தமாய் நம்மை குறிவைத்து பாய்ந்து கொண்டேயிருக்கிறது வணிக உலகம்.

ஸிக்ஸ் பேக், லீன் மஸில் கொண்ட உடலமைப்புகளே ஆரோக்கியமானவை என்று அதைசார்ந்த தொழில்கள் வலுவடைகின்றன. விதவிதமான வீட்டிலேயே பயன்படுத்தக் கூடிய உடற்பயிற்சிக் கருவிகளின் அபரிமிதத்தை பார்க்க முடிகிறது.

கட்டிட வேலை செய்யும் தொழிலாளர்கள் இயல்பாகவே அறுமடிப்பு வயிறு உடையவர்களாக இருக்கிறார்கள். அதை மட்டும் கொண்டு ஒருவரின் முழுமையான ஆரோக்கியத்தை கணித்திட முடியுமா? சாப்ட்வேர் தொழிலில் இருப்பவர்கள் ஸிக்ஸ் பேக்கை சம்பளத்தால் மூடி வைத்திருக்கிறார்கள். உடல் எடை குறைப்பு வியாபார உலகின் முதல் தேடலே இவர்கள்தான். அப்புறம் பெண்கள். அதிலும் இல்லத்தரசிகள் -  ட்ரட் மில், எலிப்பிடிகல் சைக்கிள் போன்றவற்றை அவசரமாக வாங்கி துணி காயப்போடப் பயன்படுத்துபவர்கள்.

எனக்கு சிறுவயதிலிருந்தே உடற்பயிற்சி மேல் உசிர் - என்றெல்லாம் சொல்ல இயலாது. தயிர்சாதம் (எருமைத்தயிர்) விரும்பி விரும்பி சாப்பிடுவதால் சிறுவயதிலிருந்தே நான் கொஞ்சம் பப்ளிதான். அம்மாக்களுக்கு மகன்கள் கொழுகொழுவென்று இருக்க வேண்டும். அதற்காக வறுத்தல் பொரித்தல் அவித்தல் என சமையல் கடவுள்களாக இருக்கிறார்கள். இதன் பின்விளைவுகள் என்னவோ கொழுக்மொழுக் பையன்களையே சேர்கிறது. கிரிக்கெட்டில் முதலில் பேட்டிங்கோ அல்லது பந்து வீசுவதோ ஏன் பர்ஸ்ட் ஸ்லிப்பில் நின்று பிச்சைக் கூட எடுக்க விடமாட்டார்கள். அதிகம் போனால் டாஸ் போடுவது அல்லது அம்பயரிங் செய்வது இதுமாதிரி ஏதாவது கொடுப்பார்கள்.

ஜிம் ஏதுமில்லாத சிறுகிராமங்களில்தான் என் சிறுவயதும் தயிர்சாதங்களும் நகர்ந்தன. நகர்விட்டு கிராமத்திற்கு நாங்கள் குடியேறிய போது நான் இரண்டாம் வகுப்பு. உன்னோடது நீர் உடம்புடா.. சத்தே கிடையாதுங்கிறேன் என்பான் ஒருத்தன். அதென்னடா ஊதுகாமலை வந்தவனாட்டம் இருக்கு கன்னம் என்பான் இன்னொருத்தன். இளம்பிராயத்து நண்பர்களில் யாரும் சட்டைப் போட்டு திரிவதில் அவ்வளவு உடன்பாடு கிடையாது. எலும்புகளை எண்ணிவிடலாம்; நரம்புகள் புடைத்த வலுவான வேகமான கிராமத்துச் சிறுவர்கள். சுட்டெரிக்கும் வெயிலில் கூட சட்டையில்லாமல்தான் சுற்றுவார்கள். என் வீட்டிலோ படுக்கும்போதுகூட சட்டையோடுதான் கிடப்பேன். அணைக்கட்டின் சாய்வில் ஓடிவந்து ஏறி உச்சியடைவது, பனையேறி கிளி பிடிப்பது, தோட்டத்து டீஸல் என்ஜினை இயக்குவது மாட்டைப் பிடித்துக் கட்டுவது எல்லாம் எனக்கு வேடிக்கைப் பரிச்சயம் மட்டும்தான்.

அவ்வூரில், வீட்டுப் புறக்கடையிலேயே யாருக்கும் தெரியாமல் ஒரு ஜிம்மை நிறுவியிருந்தேன். பழைய அம்மி, விறகு தரிக்கப் பயன்பட்ட மரத்துண்டு, சைக்கிளில் குடங்களை சுமக்கப் பயன்படுத்தும் கயிறு (அதனுள் ஒரு கம்பி - pull ups செய்ய) இப்படியாக வீட்டிலிருந்த உபரிகளைக் கொண்டு அது செயல்பட்டுக் கொண்டிருந்தது. மாலை பள்ளிதிரும்பியதும் நேரே புறக்கடைதான். வேர்க்க விறுவிறுக்க என்று எழுத ஆசைதான்.. இருந்தாலும் பாலகன் அளவில் சிறப்பாகவே செய்தேன் என நம்புகிறேன். அம்மாவுக்கு நான் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருப்பது தெரிந்தால் உடனே புளங்காகிதத்தின் உச்சியை எட்டிப்பிடித்து விடுவார்கள். மீண்டும் சமையல் கடவுள் அவதாரம்தான்.. பொரித்தல் அவித்தல் வறுத்தல் என அம்மி குளவிகளைத் தூக்கி களைத்து வரும் மகனுக்காக தயார் நிலையில் இருப்பார். உண்மையில் சிறப்பாக தேகப்பயிற்சி செய்தவர் அம்மாதான்.

உடலில் உறைந்துள்ள நிலத்தன்மை, மரபுத்தன்மை, உணவுக் கலாச்சாரம், தொழில்முறை மற்றும் உறவுகள் அடிப்படையிலேயே நமக்கான ஆரோக்கிய உடலமைப்பை நாம் தேர்ந்து கொள்ள வேண்டும் எனப்படுகிறது.

ஜிம் மெம்பர்ஷிப் எக்ஸ்பைரியாகப்போவுது.. அதனாலதான் கபாலத்தைத் தாண்டி இப்படிக் கருத்துக்கள் கொத்துக் கொத்தாய் விழுகின்றன!